ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் கொள்வனவு?

எரிபொருள் சந்தையில் இருந்து ரஷ்யா வெளியேறினால், தட்டுப்பாடு மற்றும் அதிக விலை ஏற்படும். இது ஒரு பொருளாதார எழுச்சியை உருவாக்கும்.

நவம்பர் 25, 2022 - 14:17
ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் கொள்வனவு?

சர்வதேச  விதிமுறைகளை மீறாத பட்சத்தில் ரஷ்யாவிடமிருந்து சலுகை விலையில் எண்ணெய் கொள்வனவு செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்கும் என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், ரஷ்ய எண்ணெய்க்கான தள்ளுபடி விலை மற்ற நாடுகளுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது. ஏனெனில் எந்த நாடும் ரஷ்யாவை எரிபொருள் சந்தையில் இருந்து விலக்க விரும்பவில்லை.

எரிபொருள் சந்தையில் இருந்து ரஷ்யா வெளியேறினால், தட்டுப்பாடு மற்றும் அதிக விலை ஏற்படும். இது ஒரு பொருளாதார எழுச்சியை உருவாக்கும்.

உக்ரைன்-ரஷ்யா மோதல் காரணமாக இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை இராஜதந்திர ரீதியிலும் பேச்சுவார்த்தை மூலமும் தீர்க்கப்பட வேண்டும்.

மசகு எண்ணெய், எரிபொருள், நிலக்கரி மற்றும் தானியங்களின் விலைகள் மட்டுமன்றி உரங்களின் விலைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் மூன்று வீதமான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதோடு, உரத்தின் அதிக விலை அவர்களைப் பாதித்துள்ளது.

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், சந்தையில் இந்த பொருட்களின் விலைகள் நான்கைந்து மடங்கு அதிகரித்துள்ளதால் இலங்கை மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, இலங்கைக்கான முதல் 10 சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளதுடன், தேயிலை போன்ற ஏற்றுமதிகளும் அந்தந்த நாடுகளுக்கு செய்யப்பட்டுள்ளன.

ஆனால், இரு நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக, சுற்றுலா மட்டுமின்றி, ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!