மாணவருக்கு தீ வைத்த சந்தேக நபர் தொடர்பில் வௌியான தகவல்

சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

நவம்பர் 30, 2022 - 12:23
மாணவருக்கு தீ வைத்த சந்தேக நபர் தொடர்பில் வௌியான தகவல்

சாதாரண தர பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற மாணவரின் உடலுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பிட்டிய தம்பவெல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் உயர் பெறுபேறுகளைப் பெற்ற குறித்த மாணவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

கடந்த சனிக்கிழமை இரவு, பரீட்சை பெறுபேறுகளை தெரிவிப்பதற்காக உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது மற்றுமொரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபர் குறித்த மாணவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபர், மாணவரின் தந்தையிடம் கப்பம் கேட்டு, கொடுக்காததால், இவ்வாறு தீ வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கைகளிலும் கழுத்திலும் பலத்த தீக்காயம் ஏற்பட்டதால் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனுக்கு நேற்று காலை சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தீ வைத்த நபருடன் தனது மகன் இருந்ததாகவும், இருட்டாக இருந்ததால் தீ வைத்த நபரை அடையாளம் காண முடியவில்லை எனவும் மாணவரின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அம்பிட்டிய பிரதேசத்தில் நீண்டகாலமாக அச்சுறுத்தி வரும் கும்பலைச் சேர்ந்த ஒருவரே இந்தத் தீவைப்புச் செய்துள்ளதாகவும் மாணவியின் பெற்றோர் அச்சம் காரணமாக சம்பவத்தை மறைத்து வருவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதிக போதைப்பொருளுக்கு அடிமையான சந்தேக நபர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!