வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் தனக்கு கிடைத்த நோபல் அமைதிப் பரிசு பதக்கத்தை டிரம்புக்கு வழங்கினார்
நோபல் அமைதிப் பரிசு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்பட முடியாதது என்று நோபல் கமிட்டி தெளிவுபடுத்தியுள்ளது. “நோபல் பதக்கம் கைமாறலாம்; ஆனால் நோபல் வெற்றியாளர் என்ற பட்டம் ஒருபோதும் மாறாது” என்றும் அது கூறியுள்ளது.
வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவரும், நோபல் அமைதிப் பரிசு வெற்றியாளருமான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ஐ வெள்ளை மாளிகையில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தனக்கு வழங்கப்பட்டிருந்த நோபல் அமைதிப் பரிசின் பதக்கத்தை இந்த சந்திப்பின்போது அவர் அதிபர் ட்ரம்ப்பிடம் வழங்கியதாக மச்சாடோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தச் செயலை “பரஸ்பர மரியாதையை வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான சைகை” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ தொடர்பான அண்மைய அரசியல் சூழ்நிலைக்குப் பிறகு, மச்சாடோவும் ட்ரம்ப்பும் நேரில் சந்திப்பது இதுவே முதல் முறை ஆகும்.
2024 தேர்தலில் மச்சாடோவின் இயக்கம் வெற்றி பெற்றதாக அவர் தரப்பு கூறினாலும், ட்ரம்ப் அவரை இன்னும் அதிகாரப்பூர்வமாக நாட்டின் தலைவராக அங்கீகரிக்கவில்லை. அதற்குப் பதிலாக, தற்போதைய அதிகார அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் டெல்சி ரோட்ரிக்ஸ் உடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப்புடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு ஆதரவாளர்களிடம் உரையாற்றிய மச்சாடோ, “அதிபர் ட்ரம்ப்பை நாங்கள் நம்பலாம்” என்று உறுதியளித்தார். அமெரிக்கப் புரட்சிக் காலத்தில் மார்குவிஸ் டி லாஃபாயெட், ஜார்ஜ் வாஷிங்டன் உருவம் பொறித்த பதக்கத்தை வெனிசுலாவின் சுதந்திரத் தந்தை சைமன் பொலிவர்க்கு வழங்கிய வரலாற்றுச் சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.
அதேபோல், சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு வாஷிங்டனின் அரசியல் வாரிசாகக் கருதப்படும் ட்ரம்ப்பிற்கு, வெனிசுலாவின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கு அவர் காட்டிய அர்ப்பணிப்பை மதித்து இந்தப் பதக்கத்தை வழங்குவதாக மச்சாடோ உருக்கமாக தெரிவித்தார்.
இதற்கிடையில், நோபல் அமைதிப் பரிசு ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றப்பட முடியாதது என்று நோபல் கமிட்டி தெளிவுபடுத்தியுள்ளது. “நோபல் பதக்கம் கைமாறலாம்; ஆனால் நோபல் வெற்றியாளர் என்ற பட்டம் ஒருபோதும் மாறாது” என்றும் அது கூறியுள்ளது.



