கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்!

ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சியில் டிரம்ப் ஆர்வம் காட்டி வருவதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.

ஜனவரி 7, 2026 - 16:11
கிரீன்லாந்தை கைப்பற்றுவது குறித்து பரிசீலிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்!

கிரீன்லாந்தை எவ்வாறு கைப்பற்றலாம் என்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்காக அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகளும் ஆய்வு செய்யப்படுகின்றன எனவும் கூறப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையிலும், கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முயற்சியில் டிரம்ப் ஆர்வம் காட்டி வருவதாக வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது. ஆர்ட்டிக் பிராந்தியத்தில் உள்ள எதிரிகளிடமிருந்து அமெரிக்க பாதுகாப்பை உறுதி செய்ய, கிரீன்லாந்தை கைப்பற்றுவது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கை என டிரம்ப் கருதுவதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெளிநாட்டு கொள்கை தொடர்பான முக்கிய இலக்கை அடைய எந்தெந்த வழிகளைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து ஜனாதிபதியும் அவரது ஆலோசகர் குழுவினரும் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுத் தொடரில் முதல்முறையாக உரையாற்றி டொனால்ட் டிரம்ப், “அமெரிக்க கனவு நிறுத்த முடியாதது” எனும் கருப்பொருளில்,  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் என 7 முக்கிய விடயங்களை முன்வைத்திருந்தார். அதன்போது கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் விருப்பம் குறித்துப் பேசிய டிரம்ப், அது எந்த வகையிலாவது நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருந்தார். 

கிரீன்லாந்து, டென்மார்க்கின் தன்னாட்சியுள்ள ஆட்சிப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!