கிரீன்லாந்தை “சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்”: ரஷ்யா–சீனாவைத் தடுக்க டிரம்ப் அழைப்பு
கிரீன்லாந்து, டென்மார்க்கின் அரை-தன்னாட்சி பிரதேசமாக இருந்தாலும், அமெரிக்கா அதை வாங்குவதைப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை சமீபத்தில் தெரிவித்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவும் சீனாவும் கிரீன்லாந்தில் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதைத் தடுக்க, அமெரிக்கா அந்த தீவை “சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
“நாடுகள் உரிமையைக் கொண்டிருக்க வேண்டும்... குத்தகைகளைப் பாதுகாக்க முடியாது. நாங்கள் கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டும்,” என்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறினார். அதை “எளிதான வழியில்” அல்லது “கடினமான வழியில்” செய்வோம் என்றும் அவர் எச்சரித்தார்.
கிரீன்லாந்து, டென்மார்க்கின் அரை-தன்னாட்சி பிரதேசமாக இருந்தாலும், அமெரிக்கா அதை வாங்குவதைப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை சமீபத்தில் தெரிவித்தது. இருப்பினும், டென்மார்க்கும் கிரீன்லாந்தும் அந்தப் பிரதேசம் “விற்பனைக்கு இல்லை” என்று தெளிவாகக் கூறியுள்ளன.
கிரீன்லாந்தின் அனைத்து முக்கிய கட்சித் தலைவர்களும் — எதிர்க்கட்சி உட்பட — “எங்கள் எதிர்காலத்தை எங்களே தீர்மானிக்க வேண்டும். நாங்கள் அமெரிக்கர்களாகவோ, டேன்ஸாகவோ இருக்க விரும்பவில்லை; கிரீன்லாந்துவாசிகளாக இருக்க விரும்புகிறோம்” என ஒருமித்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளனர்.
கிரீன்லாந்து, வட அமெரிக்காவுக்கும் ஆர்க்டிக்குக்கும் இடையில் உள்ள மூலூத்தமான புவியியல் இடமாகக் கருதப்படுகிறது. ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிரான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் கடல் கண்காணிப்புக்கு இது முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்கா ஏற்கனவே கிரீன்லாந்தின் வடமேற்கு முனையில் உள்ள பிட்டுஃபிக் இராணுவத் தளத்தில் 100க்கும் மேற்பட்ட வீரர்களை நிரந்தரமாக நிறுத்தியுள்ளது.
இருப்பினும், டிரம்ப் தற்போதைய குத்தகை ஒப்பந்தம் போதாது என்று கூறினார். “ஒன்பது ஆண்டு அல்லது 100 ஆண்டு ஒப்பந்தங்கள் போதாது; உரிமை தேவை,” என்றார் அவர்.
அதே நேரத்தில், டென்மார்க்கின் நேட்டோ கூட்டாளிகளான ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா, “டென்மார்க்–கிரீன்லாந்து உறவு தொடர்பான முடிவுகளை அவர்களே எடுக்க வேண்டும்” என உறுதிப்படுத்தியுள்ளன. ஆர்க்டிக் பாதுகாப்பில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பு தேவை என்றாலும், அது “கூட்டுறவாகவும், ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டும்” இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.