பிரவுன் பல்கலைக்கழக வளாக துப்பாக்கிச் சூடு: விசாரணையை ஆரம்பித்த ட்ரம்ப் நிர்வாகம்

டிசம்பர் 13 அன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரவுன் மாணவர் கிளாடியோ நெவ்ஸ் வலென்டே (48), கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

டிசம்பர் 23, 2025 - 06:13
பிரவுன் பல்கலைக்கழக வளாக துப்பாக்கிச் சூடு: விசாரணையை ஆரம்பித்த ட்ரம்ப் நிர்வாகம்

பிரவுன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்தப் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகம் விசாரணை தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை, U.S. Department of Education-இன் Federal Student Aid அலுவலகம், இந்த ஐவி லீக் கல்வி நிறுவனத்தின் மீது அதிகாரப்பூர்வ ஆய்வை ஆரம்பித்ததாக அறிவித்தது.

இந்த விசாரணை, வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நிகழும் குற்றங்கள் குறித்த தகவல்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும் என்பதையும், அவசர எச்சரிக்கைகளை நேரத்தில் வழங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் கிளேரி சட்டத்தை (Clery Act) பிரவுன் பல்கலைக்கழகம் மீறியதா என்பதை ஆய்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது. சட்ட விதிமுறைகளை பின்பற்றத் தவறினால், மத்திய அரசின் மாணவர் உதவி நிதியை இழக்கும் அபாயம் கல்வி நிறுவனங்களுக்கு ஏற்படும் என கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை, சமீப மாதங்களில் பிரவுன் பல்கலைக்கழகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும். கடந்த ஜூலை மாதம், வளாகத்தில் யூத மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அணுகுமுறை மற்றும் மாணவர் சேர்க்கையில் இன அடிப்படையிலான நடைமுறைகள் தொடர்பான சிவில் உரிமை விசாரணைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பல்கலைக்கழகம் மத்திய அரசுடன் 50 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை மேற்கொண்டிருந்தது. இதன் மூலம், முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட 510 மில்லியன் டாலர் மதிப்பிலான மத்திய ஆராய்ச்சி நிதியும் மீண்டும் வழங்கப்பட்டது.

டிசம்பர் 13 அன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பிரவுன் மாணவர் கிளாடியோ நெவ்ஸ் வலென்டே (48), கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

கல்வித் துறை வெளியிட்ட அறிக்கையில், பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் “தேவையான தரத்திற்குச் சரியாக இல்லாமல் இருந்திருக்கலாம்” என்றும், இதன் காரணமாக சந்தேகநபர் தப்பிச் செல்ல வாய்ப்பு ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், துப்பாக்கிச் சூடு தொடர்பான அவசர அறிவிப்புகள் மாணவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தாமதமாக அனுப்பப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து கல்வித் துறை செயலாளர் Linda McMahon கூறுகையில், மாணவர்கள் கல்வி நிலையங்களில் பாதுகாப்பாக உணர வேண்டும் என்பதே முதன்மை என்றும், மத்திய நிதி பெறும் அனைத்து கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் ட்ரம்ப் நிர்வாகம் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், Brown University நிர்வாகம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும், கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், வளாகம் முழுவதும் 1,200-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும், துப்பாக்கிச் சூடு குறித்து அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களுக்குள் சுமார் 20,000 பேருக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. பாதுகாப்பு காரணங்களால், கேமராக்களின் துல்லியமான இருப்பிடங்களை வெளியிட முடியாது என்றும் பல்கலைக்கழகம் விளக்கமளித்துள்ளது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான வளாக பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை ஜனவரி 30க்குள் சமர்ப்பிக்குமாறு கல்வித் துறை பிரவுன் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!