தைவானின் தலைநகர் தைபேவில் வெள்ளிக்கிழமை மாலை 5:20 மணியளவில் நடந்த பயங்கரமான கத்தித் தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்; ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். அலுவலக நேரம் முடிவடையும் நேரத்தில் மக்கள் நெரிசல் அதிகமாக இருந்த சமயத்தில், 27 வயது சாங் வென் என்பவர் முதலில் தைபே மெயின் மெட்ரோ நிலையத்தில் புகைக்குண்டுகள் மற்றும் தீப்பந்தங்களை வீசி பதற்றத்தை உருவாக்கினார்.
அதன்பின் சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள சோங்ஷான் மெட்ரோ நிலையம் நோக்கி ஓடிச் சென்ற அவர், வழியில் ஒரு ஹோட்டலில் இருந்து கத்தியை எடுத்துக்கொண்டு, மக்களை குறிவைத்து கத்தியால் தாக்கினார். அவரது தாக்குதலைத் தடுக்க முயன்ற ஒரு குடிமகன் கடுமையாக காயமடைந்து பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார் — இதன்மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.
பின்னர் அவர் அருகிலுள்ள புத்தகக் கடை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோருக்குள் சென்றதை அடுத்து, போலீசார் முற்றுகையிட்டனர். அப்போது அவர் அந்த கட்டிடத்தின் மேல்தளத்திலிருந்து விழுந்து தீவிரமாக காயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார் என அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
சமூக வலைதளங்களில் பரவிய காணொளிகளில், கருப்பு உடையும் தொப்பியும் அணிந்த அவர், சாலையில் புகைக்குண்டுகளை வீசி, கையில் பெரிய கத்தியுடன் நடந்து செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
வன்முறை குற்றங்கள் மிகவும் அரிதாக நடைபெறும் தைவானில், இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2014-இல் தைபே மெட்ரோவில் நடந்த கத்தித் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்த நினைவு இன்னும் பசுமையாக இருக்கும் நிலையில், இந்த சம்பவம் பொது பாதுகாப்பு குறித்த பதட்டத்தை மீண்டும் தூண்டியுள்ளது.
இதையடுத்து, தைவான் பிரதமர் சோ ஜங்-டை மெட்ரோ, ரயில் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார். தாக்குதலாளரின் பின்னணி, குற்ற வரலாறு, தொடர்புகள் மற்றும் சரியான நோக்கம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தைவான் ஜனாதிபதி வில்லியம் லாயும் விரைவான மற்றும் விரிவான விசாரணைக்கு உறுதியளித்துள்ளார். உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி, சாங் வென் முன்பு குற்றப் பதிவு கொண்டவராகவும், காவல்துறையால் தேடப்பட்டவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.