ஆப்கானிஸ்தானில் பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை
கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான்களால் முடக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் செம்மையான வாழ்க்கை முறையை தருவோம் என்று உறுதி அளித்தனர்.
ஆனால் தற்போது பெண்களின் கல்வியை முடக்கும் அரசாணையை வெளியிட்டு உலக விமர்சனங்களை பெற்று வருகிறது.
உயர்கல்வித்துறை அமைச்சர் நெடா முகமது நதீம் கையொப்பமிட்ட அரசாணை ஒன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பப்பட்டபட்டுள்ளது.
அதில், மறு அறிவிப்பு வரும் வரை, பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை உடனடியாக அமல்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆட்சியைப் பிடித்ததில் இருந்தே ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்களின் சுதந்திரம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தாலிபான்களால் முடக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
முதலில் , பல்கலைக்கழகங்கள் ஆண் மற்றும் பெண் மாணவர்களை பிரித்து தனி தனி வகுப்பறைகளை நடத்தி வந்தன. அதே நேரத்தில் பெண்கள் பெண் பேராசிரியர்கள் அல்லது வயதான ஆண்கள் மட்டுமே கற்பிக்க அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் டீன் ஏஜ் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளனர். ஆப்கானிய மதகுருமார்கள் இஸ்லாத்தின் கடுமையான பதிப்பைக் கடைப்பிடிப்பதாக கூறிக்கொண்டு பெண்களது கல்வியையும் உரிமைகளையும் பிடுங்குவதாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளின் அமைப்புகள் கூறினாலும் தாலிபான் அரசு தொடர்ந்து பெண்களுக்கு தடைகளை வித்திட்டு வருகிறது.
பெண்கள் பல அரசு வேலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வீட்டில் தங்குவதற்கு சம்பளம் குறைக்கப்படுகிறது. அவர்கள் ஆண் உறவினரின்றி பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் வீட்டிற்கு வெளியே பர்தா அணிந்து மறைந்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.
பழமைவாத அரசியல் சூழலால், நவம்பர் மாதத்தில் அவர்கள் பூங்காக்கள், கேளிக்கைகள், ஜிம்கள் மற்றும் பொது குளியல் அறைகளுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் தற்போது நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆசிரியர் மற்றும் மருத்துவர் ஆகும் கனவோடு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்கேற்ற மூன்று மாதங்களுக்குள் உயர்கல்விக்கான தடை வந்துள்ளது.
பல தலிபான் அதிகாரிகள் இடைநிலைக் கல்வித் தடை தற்காலிகமானது என்று கூறுகிறார்கள். ஆனால் நிதி பற்றாக்குறை,இஸ்லாமிய வழிகளில் பாடத்திட்டத்தை மறுவடிவமைக்க தேவையான நேரம் என்று சில பொருந்தாத சாக்குப்போக்குகளை வெளிப்படுத்தியுள்ளனர் .
தலிபான்களின் இரண்டு ஆட்சிகளுக்கு இடைப்பட்ட 20 ஆண்டுகளில், பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நாடு, சமூக ரீதியாக பழமைவாதமாக இருந்தபோதிலும் பெண்கள் அனைத்து துறைகளிலும் வேலை தேட முடிந்தது. ஆனால் அவை யாவும் இப்போது தலைகீழாக மாறி வருகிறது.