உலக நடனப்போட்டிக்கு இலங்கை சிறுவர்கள் தெரிவு

அமெரிக்காவில் இடம்பெறவுள்ள உலகின் மிகப்பெரிய நடன நிகழ்வான வேர்ள்ட் ஒப் டான்ஸ் (World of Dance) நிகழ்ச்சிக்கு இலங்கையிலிருந்து ஐந்து தமிழ் சிறுவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உலகிலுள்ள 25 நாடுகளின் பங்கேற்பாளர்களுடன் 2007ஆம் ஆண்டு முதல் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு இலங்கையிலிருந்து நடனக்குழு தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் முறையாகும்.
இலங்கையின் கொட்டாஞ்சேனை மற்றும் வெள்ளவத்தை பகுதிகளில் இயங்கும் சீ.ஜே.டான்ஸ் லேப் நடன பள்ளியில் பயிலும் மாணவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடைய உத்தியோகபூர்வ சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள திறமைகளை அடையாளம் கண்டு, பல தகுதிச்சுற்றுக்களின் அடிப்படையில் இவர்களுக்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
25 நாடுகளுடனான போட்டியாளர்களுடன் இரு சுற்றுக்களில் இலங்கை போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் ஓகஸ்ட் 12ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கடந்த வருடம் இந்திய போட்டியாளர்கள் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இம்முறை இலங்கையிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ளது.
இவ்வாறு உலகத்தரம் வாய்ந்த நிகழ்வில் பங்குபற்றுவதற்கு இலங்கை சிறுவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றுள்ள போதும் போதிய பொருளாதார வசதிகள் இன்மையால் அவர்களால் அந்நிகழ்ச்சிக்கு செல்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
நடன நிகழ்ச்சிக்கான மூன்று பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர், அமெரிக்காவுக்கு செல்ல வேண்டிய நிலை காணப்படுகின்றது.
அமெரிக்க குடிவரவு விதிமுறைகளின் படி, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அந்நாட்டுக்கு செல்ல வேண்டுமாயின் பெற்றோர் அல்லது பாதுகாவலருடனேயே செல்ல வேண்டும். தற்போது நிகழ்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 5 சிறுவர்களும் 13 வயதுக்குட்பட்டவர்களாவர். நிகழ்வில் பங்குபற்றுவதற்கு 10 நாட்கள் அங்கு தங்க வேண்டிய நிலை உள்ளது.
இதனால் விமான சீட்டுக்கான கட்டணங்கள், தங்குமிடம் மற்றும் உணவு போன்றவற்றுக்கு அதிக தொகையை செலவு செய்ய வேண்டியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இத்தொகையை பெற்றுக்கொள்வது பாரிய சவாலாக இருந்தாலும் சிறுவர்களுக்கான இவ்வாறான பிரமாண்ட வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதும் அவசியமாகின்றது.
இதற்காக பலரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டாலும் பலர் அதை நிராகரிக்கும் நிலையே காணப்படுகின்றது. இதனால் உதவும் நபர்களிடம் இந்த கோரிக்கையை அவர்கள் முன்வைக்கின்றனர்.
உதவ முன்வருவோர் 0776959555 தொடர்பு இலக்கத்துடனோ, 128/2, காலி வீதி வெள்ளவத்தையில் அமைந்துள்ள சீ.ஜே.டான்ஸ் லேப் நடன பயிற்சி நிலையத்துடனும் cjs_dancelab என்ற இன்ஸ்டாகிராம் மற்றும் cjs dance lab the Indian dance school என்ற பேஸ்புக் பக்கத்தினூடாகவும் அழைப்யை ஏற்படுத்தலாம்.