ஹோட்டல் குளியலறையில் பெண்ணின் சடலம் - தப்பிச்சென்ற காதலன்
பேங்காக் ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நபரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

பேங்காக் ஹோட்டலில் தாய்லாந்து பெண்ணைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் சிங்கப்பூர் நபரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்ணின் காதலரான அவர் சியாங் ராய்க்குத் தப்பியோடியிருக்கலாம் என்று தாய்லந்து பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அவரின் பெயர் டேனியல் பெஞ்சமின் கோ வெய்-என் என்று தாய்லந்து ஊடகம் தெரிவித்துள்ளதுடன், அவரின் வயதுக் குறித்து இரு வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனையடுத்து, குறித்த நபரை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் பெயர் பிராவ்பிலாட் பலாடோன் என்றும் அவருக்கு 30 வயது என்றும் கூறப்படுகிறது. அவர் கடந்த மார்ச் 26ஆம் தேதி ஹோட்டல் அறையொன்றின் குளியலறையில் அவர் சடலமாக கிடந்தார்.
பெண்ணின் காதலர் 25ஆம் தேதி பயணப்பெட்டியுடன் கறுப்பு காரில் ஹோட்டலை விட்டுப் புறப்பட்டுசென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், உயிரிழந்த பெண்ணின் சில விலையுயர்ந்த பொருள்களையும் அவர் எடுத்துச் சென்றதாக நம்பப்படுகிறது.
அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் சந்தித்துக்கொண்டதாகவும் கடந்த 3 ஆண்டுகளாகப் பழகிவருவதாகவும் பெண்ணின் தாயார் தெரிவித்து உள்ளார்.
ஆனால் அவரை ஒருமுறைகூட மகள் குடும்பத்திடம் அறிமுகப்படுத்தியதில்லை என்றும், ஒருவேளை தான் காணாமல் போய்விட்டால் அதற்குக் காரணம் தமது காதலர்தான் என்று மகள் தம்மிடம் அண்மையில் கூறியதாகவும் அத்தாய் கூறியுள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பின்னரே பெண்ணின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.