பரந்தன் – முல்லைத்தீவு வீதியில் பஸ்–கார் நேருக்கு நேர் மோதி விபத்து: நால்வர் உயிரிழப்பு
பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் மற்றும் முல்லைத்தீவு விசுவமடுவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் ஆகிய நேருக்கு நேர் மோதி, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து, கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில், சங்கரநாராயணர் கோவிலுக்கு அருகே நேற்று (12) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பரந்தனிலிருந்து முல்லைத்தீவு நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ் மற்றும் முல்லைத்தீவு விசுவமடுவிலிருந்து பரந்தன் நோக்கி வந்த கார் ஆகிய நேருக்கு நேர் மோதி, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து நேரத்தில் கார் முழுமையாக நசுங்கி அதற்குள் சிக்கியிருந்த இருவரின் உடல்கள் நீண்ட நேர முயற்சிகளுக்குப் பின்னர் மீட்கப்பட்டு, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், விசுவமடு பகுதியைச் சேர்ந்த 32, 34 மற்றும் 46 வயதுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த மற்றொரு நபர் தொடர்ந்தும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

