வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் – நியூயார்க் மேயர் கடும் கண்டனம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், ஜனநாயகக் கட்சி சார்பில் நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசார காலத்தில் ஜனாதிபதி டிரம்பை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
வெனிசுலா மீது அமெரிக்கா நடத்தியதாக கூறப்படும் இராணுவ தாக்குதலுக்கு நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ஒரு இறையாண்மை கொண்ட நாட்டை தாக்குவது கூட்டாட்சி தத்துவத்துக்கும் சர்வதேச சட்டத்துக்கும் எதிரான போர் செயல் எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நேரடியாக தொடர்பு கொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்குள் வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருள் அடிமைத்தனத்துக்கு உள்ளாகி வருவதாகவும் ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். போதைப்பொருள் கடத்தலுக்கு வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அவர் பகிரங்கமாக கூறியிருந்தார்.
இதனிடையே, வெனிசுலா கடற்பகுதியில் அமெரிக்க கடற்படை ரோந்து நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி, வெனிசுலாவைச் சேர்ந்த பல கப்பல்களை அமெரிக்கா தாக்கி அழித்ததாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலளித்த வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவோம் என கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில், வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் நகரில் அதிகாலை நேரத்தில் சுமார் ஏழு இடங்களில் அமெரிக்க இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வெனிசுலா முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மேலும், வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இனி வெனிசுலாவின் நிர்வாக பொறுப்புகளை அமெரிக்கா ஏற்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி மீண்டும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், ஜனநாயகக் கட்சி சார்பில் நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசார காலத்தில் ஜனாதிபதி டிரம்பை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
அதேபோல், ஜோஹ்ரான் மம்தானி மேயராக தேர்வு செய்யப்பட்டால் நியூயார்க் நகரில் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் உருவாகும் என டிரம்ப் முன்பு விமர்சித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.