விமானத்திற்குள் நிர்வாணமாக ஓடிய நபர்... நடுவானில் அதிர்ச்சி சம்பவம்
விமானம் கிளம்பிய சற்று நேரத்தில் பயணி ஒருவர் விமானத்தின் உள்ளே நிர்வாணமாக ஓடியுள்ளார்.

ஆஸ்திரேலிய உள்நாட்டு விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் விமானம் கிளம்பியதும் உள்ளே நிர்வாணமாக ஓடியதால் விமான நிலையத்தில் வைத்து பொலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
மே 27 ஆம் திகதி இரவு மேற்கு கடற்கரை நகரமான பெர்த்தில் இருந்து கிழக்கு கடற்கரை நகரமான மெல்போர்னுக்கு 3.30 மணி நேர பயணமாக விர்ஜின் ஆஸ்திரேலியா நிறுவனத்தின் விமானம் கிளம்பியுள்ளது.
விமானம் கிளம்பிய சற்று நேரத்தில் பயணி ஒருவர் விமானத்தின் உள்ளே நிர்வாணமாக ஓடியுள்ளார்.
விமானத்தைத் தரையிறக்குமாறுக் கூறிய அவர், விமான பணிப்பெண்ணை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணியின் இடையூறால் மீண்டும் பெர்த் விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்கியதாகவும், அங்கு காத்திருந்த ஆஸ்திரேலிய காவல்துறை அதிகாரிகள் அந்தப் பயணியைக் கைது செய்ததாகவும் விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பின், காவல்துறையினர், ”கைது செய்யப்பட்ட நபர் நடுவானில் விமானத்தின் உள்ளே நிர்வாணமாக ஓடி விமான பணிப்பெண்ணைக் கீழே தள்ளிவிட்டார்.
தற்போது, அந்த நபர் சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், பெர்த் நகர நீதிமன்றத்தில் ஜூன் 14 அன்று ஆஜராவார் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தனர்.
விமான நிறுவனமும், காவல்துறையினரும் இந்த சம்பவத்திற்கானக் காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்புக் கேட்ட விமான நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்று கூறியுள்ளனர்.