சீனாவில் ஒரே மாதத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்!

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்றுக்கு யாரும் உயிரிழக்காத நிலையில் மே மாதத்தில் 164 பேர் உயிரிந்துள்ளனர்.

ஜுலை 7, 2023 - 22:13
சீனாவில் ஒரே மாதத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்!

சீனாவில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 239 பேர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா தொற்றுக்கு யாரும் உயிரிழக்காத நிலையில் மே மாதத்தில் 164 பேர் உயிரிந்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் முதன் முதலில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

பின்பு அங்கு, ஜீரோ கோவிட் அமல்படுத்தப்பட்டு, கொரோனாவிற்காக தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் திட்டம் ஆகியவை கடைபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, ஒரு இடத்தில் ஒரு நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலே முழு நகரத்திற்கும் ஊரடங்கு விதிக்கப்பட்டது.

சீனா மட்டுமன்றி பல நாடுகளும் கொரோனாவிற்காக பெரிதும் பாதிக்கப்பட்டன. தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகமானதால் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டது.

பின்பு, கடந்த 2022 டிசம்பரில் சீனா கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியது. இதனால் சிறிய இடைவெளியில் 60 ஆயிரம் பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர். 

இது தொடர்ந்து கொண்டே வந்து தற்போது 2023 ஜனவரி, பிப்ரவரியில் இந்த உயிரிழப்பு எண்ணிக்கைகள் உச்சத்தில் உள்ளது. அதன்படி, ஜனவரி 4 ஆம் திகதி ஒருநாள் மட்டும் அதிகபட்ச உயிரிழப்பாக 4,237 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டது. 

இந்நிலையில் ஜூன் மாதத்தில் 239 உயிரிழப்புகள் ஏற்பட்டதையடுத்து, இது தொடருமா என்ற சந்தேகத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்த 239 பேரில் 2 உயிரிழப்புகள் மட்டுமே கொரோனா தாக்கத்தால் நுரையீரல் செயல்படாததால் நிகழ்ந்தன. 

மீதம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய், இதய பாதிப்புகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் பாதிப்புகள் இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதன்படி. கடந்த ஜனவரி 3, 2022 முதல் ஜூலை 5, 2023 வரை சீனாவில் 9,92,92,081 பேருக்கு கொரோனா தொற்று மற்றும் 1,21,490 பேர் உயிரிழந்துள்ளனர். 

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!