ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிக்க கேமரா!

ஈரானில் பொது இடத்தில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிப்பதற்காக கேமரா வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 11, 2023 - 19:46
ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிக்க கேமரா!

ஈரானில் பொது இடத்தில் ஹிஜாப் அணியாத பெண்களைக் கண்காணிப்பதற்காக கேமரா வைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஈரான் காவல்துறை தரப்பில் கூறும்போது, “பொது இடங்களில் ஹிஜாப் அணியாத பெண்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படும். 

ஹிஜாப் அணியாமல் பொதுவெளிக்குச் சென்றால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் அவர்களுக்கு தெரிவிக்கப்படும். இதன் மூலம் ஹிஜாபை எதிர்ப்பது குறையும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரான் அரசின் இந்த நடவடிக்கை, பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. 

மூன்று மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு ஈரான் தூக்குத் தண்டனை அறிவித்தது. 

ஆனால், இவற்றின் அதிகாரபூர்வ எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை. மேலும், போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் இந்தச் செயலுக்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தது. எனினும், ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்குவது தொடரும் என்று ஈரான் அரசு தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள் உட்பட 10,000 பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!