செமரு எரிமலை வெடிப்பு: 190 மலையேறிகள் பாதுகாப்பாக மீட்பு
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை மீண்டும் வெடித்ததில், 13 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பலும் எரிவாயுவும் பறந்து பரவின. இதையடுத்து அதிகாரிகள் உச்ச அபாய எச்சரிக்கையை அறிவித்தனர்.
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை மீண்டும் வெடித்ததில், 13 கிலோமீட்டர் தூரம் வரை சாம்பலும் எரிவாயுவும் பறந்து பரவின. இதையடுத்து அதிகாரிகள் உச்ச அபாய எச்சரிக்கையை அறிவித்தனர்.
எரிமலையின் குமுறல் தற்போது குறைந்துள்ளதாக இந்தோனேசியப் புவியியல் துறை தெரிவித்தாலும், நிலைமையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
வெடிப்பின் காரணமாக எரிமலையின் சரிவுகளிலிருந்த 190 பேர் — பெரும்பாலும் மலையேறிகள் — தேசியப் பூங்கா அதிகாரிகளால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவர்கள் வெடிப்புக்குப் பிறகு முகாம்களில் சிக்கிக் கொண்டிருந்ததாக செமரு தேசியப் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
எரிமலைக்கு அருகிலுள்ள கிராமங்களில் இருந்த சுமார் 900 பேர் அருகிலுள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள் மற்றும் கிராம மண்டபங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு, 2021ஆம் ஆண்டு ஏற்பட்ட செமரு வெடிப்பில் சுமார் 50 பேர் உயிரிழந்ததுடன், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. 10,000க்கும் அதிகமான மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.