உணவளித்த மாணவர்.. 50 முறை சுத்தியலால் அடித்து கொன்ற நபர்
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் பகுதிநேர வேலை செய்து வந்த விவேக் சைனி என்ற 25 வயது இந்திய மாணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்கா என்ன தான் பாதுகாப்பான நாடாக இருந்தாலும் சில மோசமான சம்பவங்கள் அங்கு நடக்கிறது. அப்படியொரு கொடூர சம்பவம் தான் இப்போது அங்கு நடந்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் பகுதிநேர வேலை செய்து வந்த விவேக் சைனி என்ற 25 வயது இந்திய மாணவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீடு இல்லாமல் தெருவில் வசித்து வந்த ஒருவர் இந்திய மாணவரைக் கொலை செய்துள்ளார். கடந்த ஜனவரி 16ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்த நிலையில், இது தொடர்பான வீடியோ இப்போது தான் இணையத்தில் பரவி வருகிறது.
அடித்துக் கொல்லப்பட்ட விவேக் சைனி உள்ளிட்ட கன்வீனியன்ஸ் ஸ்டோரில் உள்ள ஊழியர்கள் தான் அந்த நபருக்குக் கடந்த சில நாட்களாகவே உணவு கொடுத்து, கடையிலேயே தங்க அடைக்கலமும் கொடுத்துள்ளனர்.
இது குறித்து அந்த கடையில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், "அந்த நபர் எங்களிடம் சிப்ஸ் மற்றும் கோக் கேட்டார். நாங்கள் அவருக்குத் தண்ணீர் உட்பட அனைத்தையும் கொடுத்தோம்,.
எனக்கு ஒரு போர்வை கிடைக்குமா என்று அவர் கேட்டார். எங்களிடம் போர்வைகள் இல்லை, இதனால் நாங்கள் அவருக்கு ஒரு ஜாக்கெட்டைக் கொடுத்தோம்.
அவர் சிகரெட், தண்ணீர் என அனைத்தையும் கேட்டுக்கொண்டே இருந்தார். அவர் கடந்த சில நாட்களாகவே முழுக்க முழுக்க இங்கேயே அமர்ந்திருந்தார்.. வெளியே குளிர் அதிகமாக இருந்ததால் நாங்கள் அவரை வெளியேறச் சொல்லவே இல்லை" என்றார்.
அதேநேரம் குளிர் குறைந்த பிறகும் கூட அந்த வீடற்ற இளைஞர் கடையை விட்டு வெளியேறவில்லை. இதனால் விவேக் என்ற அந்த மாணவர் அவரிடம் சென்று பேசியுள்ளார்.
உடனடியாக கடையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்ட அவர், இல்லையென்றால் பொலிஸாரை அழைக்கப் போவதாகக் கூறியுள்ளார். அப்போதும் அந்த நபரை இந்திய மாணவர் மிரட்டவோ துன்புறுத்தவோ இல்லை. அவர் இதைச் சொல்லிவிட்டு கடைக்குள் சென்றுவிட்டார்.
பின்னர் அந்த இந்திய மாணவர் வீட்டிற்குச் செல்ல ரெடியாகி கொண்டிருந்த போது, அந்த வீடற்ற நபர் சுத்தியலைக் கொண்டு இந்திய மாணவரைத் தாக்கியுள்ளார்.
தலையிலும் முகத்திலும் சுமார் 50 முறைக்கு மேல் கொடூரமாகத் தாக்கியுள்ளார். 25 வயதான அந்த இந்திய மாணவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்த போது, ஜூலியன் பால்க்னர் என்ற அந்த வீடற்ற நபர் கையில் சுத்தியலுடன் நின்று கொண்டு இருந்துள்ளார். இதையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து இரண்டு கத்திகள், இரண்டு சுத்திகளை பொலிஸார் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் நடந்த போது அங்கு வேறு சில ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜூலியன் பால்க்னர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.