ரோகித்தை கதிகலங்க வைத்த இலங்கை வீரர்.. யார் இந்த வெல்லாலகே?
வெல்லாலகே: முத்தையா முரளிதரன், ரங்கனா ஹெராத், மெண்டிஸ் என்று இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு பாரம்பரியத்தை காப்பாற்ற வந்திருக்கிறார் 20 வயதேயான வெல்லாலகே.

வெல்லாலகே: இந்திய அணியின் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா என்று ஒரே போட்டியில் அத்தனை வீரர்களையும் பொட்டலம் போட்டு விக்கெட் வேட்டை நிகழ்த்தி இருக்கிறார் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் வெல்லாலகே.
முத்தையா முரளிதரன், ரங்கனா ஹெராத், மெண்டிஸ் என்று இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சு பாரம்பரியத்தை காப்பாற்ற வந்திருக்கிறார் 20 வயதேயான வெல்லாலகே.
மினி உலகக்கோப்பை என்று சொல்லப்படும் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவும் இலங்கையும் பகிர்ந்து கொண்ட 2003ஆம் ஆண்டு பிறந்தவர் தான் வெல்லாலகே. சிறுவயதிலேயே கிரிக்கெட் மீதான ஆர்வம் தொற்றிக் கொள்ள, உடனடியாக பயிற்சியையும் தொடங்கி இருக்கிறார்.
இதன் விளைவு கடந்த ஆண்டு நடைபெற்ற யு19 உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக இருமுறையும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, இலங்கை ரசிகர்களின் கவனம் அவர் மீது திரும்பியது.
அந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தும் அசத்தினார்.
இடதுகை ஸ்பின்னர் என்பதோடு மட்டுமல்லாமல் வெல்லாலகே சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாகவும் செயல்படக் கூடியவர். அந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சதம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரைசதம் என்று மிரட்டலான இன்னிங்ஸ்களை விளையாடியவர்.
இதன் விளைவாக கடந்த ஆண்டு நடைபெற்ற லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜஃப்னா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்காக அறிமுகம் செய்யப்பட்டார்.
அந்தப் போட்டியுடன் சேர்த்து இதுவரை 13 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வெல்லாலகே 18 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். வெறும் 20 வயதிலேயே இந்திய அணியின் டாப் முதல் மிடில் ஆர்டரை சுளுக்கு எடுத்துள்ள வெல்லாலகேவின் பந்துவீச்சு, ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.