"என் மகளை வெளியே எடுத்துத் தாருங்கள்!" – மண்சரிவில் காணாமல் போன மகளுக்காக கதறும் தாய்
திடீரென கற்கள் உருளும் சத்தம் கேட்டது. முதலில் விமானம் ஒன்று பறக்கிறது என நினைத்தோம். அடுத்த நிமிடமே பூமி அதிரத் தொடங்கியது. மகள் சுழன்று சிரித்தாள் – அது அவளுக்கு விளையாட்டாகத் தோன்றியது. 'அம்மா, மண்சரிவு வருகிறது!' என்று அவள் கத்தியபடி ஓட முயன்றாள். ஆனால் ஓட முடியவில்லை.
“நான் ஒரு நாளைக்கு இருபது, முப்பது முறை இங்கே வந்து தேடுகிறேன். தயவுசெய்து யாராவது வந்து என் மகளை வெளியே எடுத்துத் தாருங்கள்!” – இந்த உருக்கமான வேண்டுகோளை கண்ணீருடன் வெளியிடுகிறார், பதுளை மாவட்டம், கந்தகெட்டிய பகுதியில் உள்ள நாகொல்ல கிராமத்தைச் சேர்ந்த 50 வயதான கே.எம். பண்டார மெணிக்கே.
கடந்த நவம்பர் 27 அன்று நாகொல்ல கிராமத்தில் ஏற்பட்ட பயங்கரமான மண்சரிவில் சிக்கி, அவரது 21 வயது மகள் எம்.ஜி. காயத்ரி காவிந்தி ராஜபக்ஷ காணாமல் போயுள்ளார். இதுவரை அவருக்கு எந்தவித தடயமும் கிடைக்கவில்லை – சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியிருந்தாலும்.
இந்த மண்சரிவில் காயத்ரியின் பாட்டனார் எம்.ஜி. நேட்ரிஸ் (82) மற்றும் பாட்டி டி.ஏ.பியசீலி திஸாநாயக்க (72) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும், இக் கிராமத்தைச் சேர்ந்த இருவர் கூடுதலாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தை நினைவு கூறி காயத்ரியின் தாய் பின்வருமாறு தெரிவித்தார்:
"நவம்பர் 24 முதல் மூன்று நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. சம்பவம் நடந்த 27ஆம் திகதி மாலை 3:30 அளவில், நானும் என் மகளும் மேல் வீட்டில் இருந்தோம். எங்கள் கீழே வசித்த என் பெற்றோர் வீட்டுக்கு அருகே நாங்கள் இருந்தோம். என் கணவர் விசேட அதிரடிப்படையில் பணியாற்றுகிறார். என் மகன் அந்த நேரத்தில் வயல் பகுதிக்குச் சென்றிருந்தான்.
திடீரென கற்கள் உருளும் சத்தம் கேட்டது. முதலில் விமானம் ஒன்று பறக்கிறது என நினைத்தோம். அடுத்த நிமிடமே பூமி அதிரத் தொடங்கியது. மகள் சுழன்று சிரித்தாள் – அது அவளுக்கு விளையாட்டாகத் தோன்றியது. 'அம்மா, மண்சரிவு வருகிறது!' என்று அவள் கத்தியபடி ஓட முயன்றாள். ஆனால் ஓட முடியவில்லை.
நான் அவள் கையைப் பிடித்திருந்தேன். அவள் எனக்கு முன்னால் தோட்டப் பக்கம் குதித்தாள் – ஆனால் அவள் கை என் கையில் இருந்து நழுவிவிட்டது. நான் தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டேன். மகன் ஓடிவந்து என்னைக் கரை சேர்த்தான். அப்போது சில நிமிடங்களுக்கு சுயநினைவை இழந்தேன்.
சுயநினைவு வந்ததும், என் அப்பா வீட்டில் புதைந்திருந்த நிலையில் வெளியே எடுக்கப்பட்டார். ஆனால் சில மணி நேரங்களில் அவர் இறந்துவிட்டார். இறப்பதற்கு முன், 'நமது குடும்பமே முடிந்துவிட்டது... மகளைக் கண்டுபிடி' என்று என்னிடம் கூறினார்.
உடனே நான் ஓடிச் சென்று, எல்லோரிடமும் என் குழந்தைகளைத் தேடும்படி கெஞ்சினேன். சிலர் வந்து தேடினார்கள். இருப்பினும் இரவு ஆகிவிட்டதால் தேடுதல் நிறுத்தப்பட்டது.
இன்றைக்கு 11வது நாள். ஆயிரக்கணக்கான முறை இந்த இடத்துக்கு வந்துள்ளேன். ஆனால் என் மகளை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவள் இங்கேதான் இருக்கிறாள் – இந்தக் கற்களுக்கு கீழே, 2 அல்லது 3 அடி ஆழத்தில். அவள் எனக்கு முன்னால் தான் குதித்தாள். யாராவது இந்த இடத்தை சரியாகத் தோண்டிப் பார்த்தால், அவளைக் கண்டுபிடிக்கலாம்.
என் மகன் இல்லாவிட்டால், நானும் இன்று உயிரோடு இருக்க மாட்டேன்.”