போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு; போலி வைத்தியரும் அகப்பட்டார்
முறையான கல்வித்தகமையோ, தொழில்தகைமையோ இல்லாத குறித்த நபர், மருத்துவ பரிந்துரைகள் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத மருந்துகளை பாவித்து வந்தமையும் இதன்போது கண்டறியப்பட்டது

கல்முனை மாநகர பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மருத்துவ நிலையம், இன்று (16) சுற்றிவளைக்கப்பட்டது.
பொதுமக்களின் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக அமையும் இடங்கள் மீதான தொடர் சுற்றிவளைப்பின் மற்றுமோர் அங்கமாகவே இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு, அந்நிலையத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களுக்கு தொடர்ந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஷகீலா இஸ்ஸதீனின் வழிகாட்டலில் இந்த திடீர் சுற்றிவளைப்பு இடம்பெற்றது.
இதன்போது, தன்னை வைத்தியராக அடையாளம் காட்டிக்கொண்டு, எவ்வித அரச அங்கிகாரமுமின்றி நடத்திவந்த மருத்துவ நிலையம், அழகுக்கலை நிலையம் மற்றும் பயற்சி நிலையம் ஆகியவற்றை நடத்தி வந்த நபர் இனங்காணப்பட்டதுடன், அவரிடமிருந்த மனித பாவனைக்கு பொருத்தமற்ற மற்றும் ஆபத்தான மருந்துகளும் கைப்பற்றப்பட்டன.
முறையான கல்வித்தகமையோ, தொழில்தகைமையோ இல்லாத குறித்த நபர், மருத்துவ பரிந்துரைகள் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் அனுமதியில்லாத மருந்துகளை பாவித்து வந்தமையும் இதன்போது கண்டறியப்பட்டதுடன், அவர் மருத்துவராக தன்னை அடையாளப்படுத்திய சான்றுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மனித உயிர்களுக்கும், சுகாதாரத்திற்கும் சவாலாக, கல்முனை மாநகர பிரதேசத்தில் சாய்ந்தமருது, பாண்டிருப்பு மற்றும் மருதமுனை பிரதேசங்களில் மூன்று கிளைகளைக் கொண்டு இயங்கிய இந்த போலி மருத்துவ நிலையத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான மேலதிக நடவடிக்கைகளை சுதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(நூருல் ஹுதா உமர்)