லண்டன் பாரம்பரிய தளத்தில் சீன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கடவுச்சீட்டு சோதனை அதிகாரம் வழங்கப்பட்டதால் பரபரப்பு
லண்டனில் உள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளத்தில் சுற்றுலாப் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள பண்டைய பிரித்தானிய பாரம்பரிய தளத்தில் சுற்றுலாப் பார்வையாளர்களின் கடவுச்சீட்டுகளை சீன அரசு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிஸ்டெர்சியன் அபே எனப்படும் செயின்ட் மேரி கிரேசஸ் அபேவின் இடிபாடுகளைத் தரிசிக்க வரும் பொதுமக்கள், விமான நிலைய பாதுகாப்பு நடைமுறைகளை ஒத்த கடுமையான சோதனைகளை சீன அதிகாரிகளிடம் சந்திக்க நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வரலாற்றுச் சின்னம், சீனா கட்டமைக்கத் திட்டமிட்டு வரும் புதிய லண்டன் சூப்பர் தூதரக எல்லைக்குள் வருவதால், வெளிவிவகாரம் மற்றும் உள்விவகார அலுவலகங்கள் இதற்கு ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்தத் திட்டம் ஏற்கனவே சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சீனாவின் சூப்பர் தூதரக திட்டத்துக்கு அனுமதி பெற, பிரிட்டன் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் சீனாவுடன் ரகசிய உடன்பாடு செய்து கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
1350ஆம் ஆண்டு மன்னர் எட்வர்ட் III நிறுவிய இந்த பாரம்பரிய தளம், தற்போது சீனாவின் தூதரகப்பகுதிக்குள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீனாவை விமர்சிப்பவர்களுக்கு இந்த சூழல் ஆபத்தானதாக மாறக்கூடும் என Inter-Parliamentary Alliance on China (IPAC)-ன் நிர்வாக இயக்குநர் Luke de Pulford எச்சரித்துள்ளார்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்களிடையிலும் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்டார்மர் வென்றதைத் தொடர்ந்து சீன தூதரகத் திட்ட பேச்சுவார்த்தைகள் மீண்டும் வேகமடைந்ததாக கூறப்படுகிறது.
மேலும், ஜனவரி மாதத்தில் சீனாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தையிலிருக்கும் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இத்திட்டத்தை நேரடியாக சேன்ஸலர் ரேச்சல் ரீவ்ஸிடம் முன்வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.