மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்குகிறது ஆஸ்திரேலிய அரசாங்கம்
புதிய திட்டத்தின் கீழ், கூடுதலாக வைத்திருக்கும், தேவையற்ற, புதிதாகத் தடை செய்யப்பட்ட அல்லது சட்டவிரோத துப்பாக்கிகளை மக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம்.
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில், மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்கும் புதிய திட்டத்தை பிரதமர் ஆன்ட்டனி அல்பனீசி அறிவித்துள்ளார். அண்மையில் சிட்னி அருகே உள்ள பொண்டி கடற்கரையில் நடைபெற்ற யூதத் திருவிழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூடு இந்த முடிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதற்கு முன்பாக, 1996ஆம் ஆண்டு தஸ்மேனியா தீவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 35 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இதே போன்ற நடவடிக்கையை ஆஸ்திரேலிய அரசு மேற்கொண்டது. அந்த சம்பவம் நவீன ஆஸ்திரேலிய வரலாற்றில் மிகப்பெரிய படுகொலையாகக் கருதப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு பொண்டி கடற்கரைச் சம்பவம் மீண்டும் நாட்டை உலுக்கியுள்ளது.
புதிய திட்டத்தின் கீழ், கூடுதலாக வைத்திருக்கும், தேவையற்ற, புதிதாகத் தடை செய்யப்பட்ட அல்லது சட்டவிரோத துப்பாக்கிகளை மக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கலாம். அவற்றைத் திருப்பிக் கொடுப்பவர்களுக்கு இழப்பீடாக அரசு பணம் வழங்கும். இந்தத் திட்டத்திற்கான செலவினத்தை மாநில அரசுகளும் மத்திய அரசும் தலா பாதியாக ஏற்கும்.
தற்போது ஆஸ்திரேலிய மக்களிடம் நான்கு மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் இருப்பதாக பிரதமர் அல்பனீசி தெரிவித்துள்ளார். இதனிடையே, பொண்டி கடற்கரை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டிசெம்பர் 21 தேசிய அஞ்சலி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாளில் நாடு முழுவதும் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும், தாக்குதல் நடந்த மாலை 6.47 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படும்.