காணாமல் ஆக்கப்பட்ட மகனின் கதியை அறியாமலே மற்றுமொரு தாய் மரணம்!

வவுனியா, தோணிக்கல்லைச் சேர்ந்த தாயின் புதல்வரான வேலுசாமி சிவகுமார், 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் காணாமல் போனதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெப்ரவரி 26, 2025 - 03:25
காணாமல் ஆக்கப்பட்ட மகனின் கதியை அறியாமலே மற்றுமொரு தாய் மரணம்!

வடக்கில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தனது மகனுக்கு நேர்ந்த கதி என்னவென்பதை வெளிப்படுத்தக் கோரி, சுமார் எட்டு வருடங்களாகப் போராடிய மற்றுமொரு தாய் பதில் தெரியாமலேயே உயிரிழந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைக் கண்டுபிடிக்க சுமார் 3,000 நாட்கள் போராட்ட களத்தை ஆக்கிரமித்த 'மாரியம்மா' என அழைக்கப்படும் வேலுசாமி மாரி, தனது 79ஆவது வயதில் நேற்றைய தினம் (பெப்ரவரி 24)  காலமானார்.

வவுனியா, தோணிக்கல்லைச் சேர்ந்த தாயின் புதல்வரான வேலுசாமி சிவகுமார், 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரில் காணாமல் போனதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மே 2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததிலிருந்து, தமது கணவர், மகள்கள், மகன்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களை தமிழர் தாயகப் பிரதேச மக்கள் தேடி வருவதோடு, பெப்ரவரி 20, 2017 முதல் எட்டு வருடங்களைக் கடந்து போராடும் பெற்றோர்களில் குறைந்தது 350 பேர் இறந்துள்ளனர்.

தமது அன்புக்குரியவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தக் கோரி, போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாணத்தின் எட்டு மாவட்டங்களிலும் பிரதிநிதித்துவத்துடன் தமிழ்த் தாய்மார்கள் முன்னெடுத்த போராட்டம் அண்மைக்கால வரலாற்றில் தெற்காசியாவின் மிக நீண்ட போராட்டமாக கருதப்படுகிறது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!