அமேசான் காட்டுக்குள் பிரமிக்க வைக்கும் வீடுகள்... கண்டுபிடிக்கப்பட்ட 2,500 ஆண்டுகள் பழைய நகரம்
அமேசான் காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமேசான் காட்டுக்குள் செழித்துப் படர்ந்த பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய பண்டைய நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமேசான் காடு தென் அமெரிக்க நாடுகளில் சுமார் 55 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது. இந்த மழைக்காடு பல உயிர் இனங்கள் மற்றும் பழங்குடியினரின் தாயகமாகும். மேலும், அமேசான் பல நாகரிகங்கள் மற்றும் கலாச்சாரங்களின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.
சமீபத்தில், அமேசான் காட்டில் ஒரு பழமையான நகரம் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2,500 ஆண்டுகள் பழமையான நகரம் என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். இதுவரை அது கவனிக்கப்படாமல் போய்விட்டது. இது கிழக்கு ஈக்வடாரின் அடர்ந்த அமேசான் காடுகளில் காணப்படுகிறது.
வீடுகள், கட்டிடங்கள் மற்றும் தெருக்களை இணைக்கும் சாலைகள் மற்றும் கால்வாய்களின் வலையமைப்புடன் இந்த நகரம் மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் கட்டப்பட்டது என்று தெரிகிறது.
அந்த காலத்திலும் அந்த கட்டிடங்கள் நவீன கட்டமைப்புகள் என்று கூறப்படுகிறது. பிரான்சின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி மையம் இந்த பழமையான நகரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த பழங்கால நகரத்தில் எத்தனை பேர் வாழ்ந்தார்கள் என்று சரியாக சொல்ல முடியாது என்றாலும், சுமார் 10,000 முதல் 100,000 மக்கள் வாழ்ந்ததாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்.
விஞ்ஞானிகள் விமானத்தில் லேசர் சென்சார்களை வைத்து அமேசான் காடுகளில் சுமார் 300 சதுர கிலோமீட்டர் பரப்பில் தேடினர்.
இந்த லேசர் சென்சார்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்து, அடர்ந்த காடுகளுக்கு அடியில் நகரத்தை கண்டுபிடித்தனர்.