ஊருக்கு போகணும்.. வார இறுதியில் வேலைக்கு வர மறுத்த ஊழியர் பணிநீக்கம்..!
ஹைதராபாத்தில் தனது குடும்ப உறுப்பினரின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு வார இறுதி நாளில் கூடுதலாக வேலை பார்க்க மறுத்த ஊழியரை, அந்நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் தனது குடும்ப உறுப்பினரின் அவசர மருத்துவ தேவையை கருத்தில் கொண்டு வார இறுதி நாளில் கூடுதலாக வேலை பார்க்க மறுத்த ஊழியரை, அந்நிறுவனம் பணி நீக்கம் செய்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல சமூக வலைதளமான ரெடிட் தளத்தில், பாதிக்கப்பட்ட அந்த ஊழியர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நிறுவனத்தின் மேலாளர் வார இறுதி நாட்களிலும், அலுவலக நேரம் முடிந்த பிறகும் தொடர்ந்து வேலை செய்யுமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.
இதற்கிடையே, தனது பாட்டிக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதால் உடனடியாக ஊருக்கு செல்ல வேண்டும் என்றும் தன்னால் கூடுதல் நேரம் வேலை செய்ய முடியாது என்றும் அந்த ஊழியர் மேலாளரிடம் கூறியுள்ளார்.
ஆனால், ஊழியரின் கோரிக்கைக்கு மேலாளர் எவ்வித மனிதாபிமானமும் காட்டவில்லை. இதனால், மன உளைச்சலில் இருந்த அந்த ஊழியர், தனது நிலை மற்றும் தான் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் குறித்து இ-மெயில் மூலம் நிறுவனத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக அந்த மின்னஞ்சலை தவறுதலாக கருதிய நிர்வாகம், மறுநாளே அவரை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வேலையை விட்டு நீக்கியுள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர், தற்போது ஹைதராபாத்தில் உள்ள தொழிலாளர் ஆணையரிடம் (Labour Commissioner) நடந்தவற்றை கூறி புகார் அளித்துள்ளார்.
அதில், சட்டத்திற்கு புறம்பாக தன்னை பணி நீக்கம் செய்ததோடு, தன்னுடைய கல்விச் சான்றிதழ்களையும் அவர்கள் வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.
பல சிறிய நிறுவனங்கள், பணியாளரின் சேவை ஒப்பந்தம் முடியும் வரை அசல் சான்றிதழ்களை வைத்திருப்பது என்பது இந்தியத் தொழிலாளர் சட்டங்களை மீறும் செயலாகும்.
எனவே, தனது அசல் ஆவணங்கள் நிறுவனத்திடம் சிக்கியிருப்பதால், தற்போது புதிய வேலை தேடுவதிலும் சிரமம் இருப்பதாக அந்த ஊழியர் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட இந்த ஊழியரின் பதிவை அடுத்து பலரும் நிறுவனத்தின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். "அசல் கல்விச் சான்றிதழ்களை வைத்துக் கொள்வது மிகப்பெரிய தொழிலாளர் விதிமீறல்" என்று ஒரு பயனர் கூறியுள்ளார்.
அதேபோல், இதுபோன்ற அராஜக நிறுவனங்களை சுட்டிகாட்டும் விதமாக, இந்த நிறுவனத்தை "லாலா கம்பெனி" (ஊழியர்களைச் சுரண்டும் தொழில்முறையற்ற நிறுவனம்) என்றும் விமர்சித்தார்.
மேலும் பலர், மாவட்ட தொழிலாளர் ஆணையரை நேரடியாக அணுகி, நிறுவனத்தின் பெயரை கூறுவதன் மூலம் மற்றவர்கள் இதுபோன்ற சிக்கலை தவிர்க்க உதவும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.