விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் NASA பணியிலிருந்து ஓய்வு

விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு மூன்று முறை பயணம் செய்த பெருமைக்குரிய சுனிதா, விண்வெளியில் மொத்தம் 608 நாட்கள் தங்கிய NASA ஆய்வாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

ஜனவரி 22, 2026 - 10:06
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் NASA பணியிலிருந்து ஓய்வு

சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams), அமெரிக்காவின் NASA ஆய்வு நிலையத்தில் 27 ஆண்டுகள் நீடித்த சிறப்புமிக்க பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றுள்ளார். 2025 டிசெம்பர் 27ஆம் திகதி அவர் அதிகாரபூர்வமாக ஓய்வு பெற்றதாக செவ்வாய்க்கிழமை (ஜன.20) வெளியிட்ட செய்திக் குறிப்பில் NASA அறிவித்துள்ளது.

அனைத்துலக விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு மூன்று முறை பயணம் செய்த பெருமைக்குரிய சுனிதா, விண்வெளியில் மொத்தம் 608 நாட்கள் தங்கிய NASA ஆய்வாளர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். மேலும், விண்வெளியில் அதிக நேரம் நடைபோட்ட பெண்மணி என்ற சிறப்பும் அவருக்கே உரியது. ஒன்பது முறை விண்வெளி நடைபயணத்தில் ஈடுபட்டு, மொத்தமாக 62 மணி நேரத்துக்கு மேல் அவர் விண்வெளியில் நடந்துள்ளார்.

அமெரிக்காவின் மிக நீண்ட ஒற்றை விண்வெளிப் பயணத்தில் பங்கெடுத்தவராகவும், விண்வெளியில் மரத்தான் ஓட்டத்தில் ஈடுபட்ட முதல் நபராகவும் சுனிதா வில்லியம்ஸ் வரலாற்றுச் சாதனைகளைப் பதிவு செய்துள்ளார். நிலவு மற்றும் செவ்வாய்க் கோளை நோக்கி வருங்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வுப் பணிகளுக்கு அடித்தளம் அமைத்தவர் சுனிதாவே என்று NASA புகழாரம் சூட்டியுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!