குடியேற்ற கெடுபிடி; கைதாகிய 5 வயது சிறுவன் பயத்தில் உறைந்து நிற்கும் புகைப்படத்தால் சர்ச்சை!
அப்போது நீல நிறத் தொப்பி மற்றும் ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் சிறுவன் லியாமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் குடியேறிகள் மீதான கெடுபிடி அதிகரித்து வரும் நிலையில் குடிவரவு அதிகாரிகளால் 5 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
அப்போது நீல நிறத் தொப்பி மற்றும் ஸ்பைடர்மேன் பையை முதுகில் சுமந்தபடி, பயத்தில் உறைந்து நிற்கும் சிறுவன் லியாமின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் மீது ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆளுகையின் கீழ் கடுமையான அடக்குமுறை தொடர்ந்து வருகிறது.
ICE - குடிவரவு அதிகாரிகள் ஏகபோக அதிகாரம் பெற்று சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, காரை விட்டு இறங்க மறுத்ததாக 37 வயதான ரெனி நிக்கோல் குட் என்ற பெண் ICE அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய நிலையிலேயே தற்போது 5 வயது சிறுவனை ICE அதிகாரிகள் கைது செய்துள்ள சம்பவம் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
மின்னசோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ் நகரில் பெற்றோருடன் வசித்து வந்த 5 வயது சிறுவன் லியாம் கோனேஜோ ராமோஸ், பள்ளி முடிந்து தந்தையுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அப்போது அவர்களை வழிமறித்து ICE அதிகாரிகள்இருவரையும் கைது செய்தனர். மேலும் இருவரையும் அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பகடையாக வைத்து வீட்டுக்குள் இருந்த தாயையும் வெளியே வரவழைத்து கைது செய்ய அதிகாரிகள் முயன்றனர். ஆனால், சிறுவனின் தந்தை, தனது மனைவியை கதவை திறக்க வேண்டாம் என வேண்டாம் என எச்சரித்துள்ளார். இதன்பின் சிறுவனையும் தந்தையையும் ICE தடுப்புக்காவலில் அடைத்தனர்.
சிறுவனை அதிகாரிகள் பகடையாக பயன்படுத்தியது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. சிறுவனின் தந்தை முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருந்ததாக குற்றம்சாட்டி அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆனால், அவர்களின் குடும்ப வழக்கறிஞர் மார்க் ப்ரோகோஷ் கூறுகையில், 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த லியாமின் குடும்பம், புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதனர், அதன் பிறகே அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். ஆனாலும், அமெரிக்க குடியேற்றத் துறை அவர்களைக் கைது செய்துள்ளது. இருவரையும் அதிகாரிகள் டெக்சாஸில் உள்ள தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
லியாம் மட்டுமின்றி, இரண்டு 17 வயது சிறார்கள் மற்றும் ஒரு 10 வயது சிறார் என மொத்தம் நான்கு குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறுவன் பயின்று வந்த கொலம்பியா ஹைட்ஸ் பள்ளி கண்காணிப்பாளர் ஜீனா ஸ்டென்விக் தெரிவித்தார்.
5 வயது சிறுவனைத் தடுப்புக்காவலில் வைத்தது மிகவும் எல்லை மீறிய செயல் என்றும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.