இன்று முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் GMOA
தேவையான வசதிகள் வழங்கப்படாத நிலையில் இலவச சுகாதார சேவை பாதிக்கப்படின், அதற்கான முழுப் பொறுப்பையும் சுகாதார அமைச்சும், அமைச்சரும், அரசாங்கமும் ஏற்க வேண்டுமென இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தினார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று திங்கட்கிழமை (26) காலை 08 மணி முதல் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளது. ஐந்து தொழிற்சங்க வழிமுறைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இந்த நடவடிக்கை முழுமையான பணிப்புறக்கணிப்பாக இல்லை. வைத்தியர்கள் தங்கள் கடமைகளை தொடர்ந்து மேற்கொள்வார்கள்; எனினும், வேலை செய்யக்கூடிய முறையான சூழல் உறுதி செய்யப்பட வேண்டுமென சங்கம் வலியுறுத்துகிறது. அரச வைத்தியசாலைகளில் கிடைக்காத மருந்துகள் மற்றும் ஆய்வுகூட பரிசோதனைகளுக்காக வெளி நிறுவனங்களுக்கு நோயாளிகளை அனுப்பும் பரிந்துரைகள் வழங்கப்படமாட்டாது என்றும், அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்படாத நிலையில் புதிய பிரிவுகளை ஆரம்பிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரசியல் நோக்கங்களுக்காக நடத்தப்படும் சில கிளினிக்குகள் மற்றும் சுகாதார முகாம்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது. அதேபோன்று, கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் நோயாளி பரிசோதனைக்கு தேவையான உதவி உத்தியோகத்தர் வழங்கப்படாத இடங்களில் வைத்தியர்கள் அந்தப் பணிகளில் இருந்து விலகுவார்கள் எனவும் தெரிவித்தார்.
தேவையான வசதிகள் வழங்கப்படாத நிலையில் இலவச சுகாதார சேவை பாதிக்கப்படின், அதற்கான முழுப் பொறுப்பையும் சுகாதார அமைச்சும், அமைச்சரும், அரசாங்கமும் ஏற்க வேண்டுமென இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்தியர் சமில் விஜேசிங்க வலியுறுத்தினார்.
மேலும், எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ள சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில், இதனை விட கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதனால், இந்தத் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலை உருவாகலாம் என்றும் தெரிவித்தார்.