தீக்குளிக்கும் குதிரைகள்: ஸ்பெயினின் ‘லாஸ் லுமினாரியாஸ்’ மரபுச் சடங்கு
வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகளைப் புனிதப்படுத்த உரிமையாளர்கள் அவற்றை தேவாலயத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.
ஸ்பெயினில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு வித்தியாசமான பாரம்பரிய கொண்டாட்டம் ‘லாஸ் லுமினாரியாஸ்’ (Las Luminarias). இதில் குதிரைகள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் வழியே பாய்ந்து ஓடுகின்றன. அதே நேரத்தில், வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள், பூனைகள் உள்ளிட்ட விலங்குகளைப் புனிதப்படுத்த உரிமையாளர்கள் அவற்றை தேவாலயத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இந்த இரு மாறுபட்ட சடங்குகளும் கத்தோலிக்க செயிண்ட் ஆன்ட்டனியை கௌரவிக்கும் விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளை ஆதரித்து, அவற்றைப் பராமரிக்க மக்களை ஊக்குவித்தவர் செயிண்ட் ஆன்ட்டனி என்பதால், விலங்குகளைப் புனிதப்படுத்தும் சடங்கு முக்கியத்துவம் பெறுகிறது.
‘லாஸ் லுமினாரியாஸ்’ என அழைக்கப்படும் இந்த விழா, ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அந்த கிராமத்தில் ஏற்பட்ட ஒரு விநோத நோய், அங்கிருந்த அனைத்து விலங்குகளையும் பாதித்ததாக கூறப்படுகிறது. அப்போது நெருப்பிலிருந்து எழும் புகை விலங்குகளை குணப்படுத்தியதாக உள்ளூர் மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் நினைவாகவே இந்த விழா இன்று வரை தொடர்கிறது.
குதிரைகளை நெருப்பின் வழியே ஓடவைக்கும் நடைமுறைக்கு விலங்கு உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஆனால், குதிரைகளுக்கு எந்தவிதமான காயமும் ஏற்படுவதில்லை என்றும், அவற்றின் பாதுகாப்பு முழுமையாக உறுதி செய்யப்படுவதாகவும் உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

