வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பெப்ரவரி 24, 2023 - 17:25
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கை - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.  

சுற்றுலாத் துறையில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீருவுகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் "சுற்றுலாத்துறையின் இருப்பு மற்றும் சவால்களை வெற்றிகொள்ளல்" என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பு ஹிக்கடுவ சிட்ரஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

அண்மைய பொருளாதார வீழ்ச்சியினால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அவற்றை வெற்றிகொண்டு, சுற்றுலாத்துறையை புத்துயிர் பெறுவதற்கான திட்டமிட்ட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

20 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கும், ஒரு சுற்றுலா பயணி, நாளொன்றுக்கு 500 டொலர்களை செலவிடக்கூடிய வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். 

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் உடனடியாக இவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை தொடர்பில் சிறந்த பிரச்சாரம் ஒன்றை உலகிற்கு கொண்டு செல்ல வேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் இவ்வருட சுதந்திர தின விழா பெருமையுடன் நடைபெற்றதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் இருந்து விலகியிருந்ததாகவும், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இலங்கையில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டுள்ள செய்தியை உலகுக்கு எடுத்துச் செல்வது அவசியமானது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இராஜாங்க அமைச்சர்களான மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, கீதா குமாரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, சம்பத் அத்துகோரள, தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலீ கமகே, காலி மாவட்ட செயலாளர் சாந்த வீரசிங்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஹிக்கடுவ நகருக்கு நடந்து சென்ற ஜனாதிபதி அங்குள்ள வர்த்தகர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!