முதல் இன்னிங்சில் இந்தியா 477 ரன்கள்... 259 ரன்கள் பின்தங்கியுள்ள இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மார்ச் 9, 2024 - 15:46
முதல் இன்னிங்சில் இந்தியா 477 ரன்கள்... 259 ரன்கள் பின்தங்கியுள்ள இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

அந்த அணியின் அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களே வீழ்த்தி அசத்தினர்.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 79 ரன்கள் அடித்தார். 

இந்தியா தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாளில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 135 ரன்கள் அடித்து இருந்தது. 

கேப்டன் ரோகித் 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றறது. தொடர்ந்து விளையாடிய ரோகித் - கில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்திய அணியை முன்னிலை பெற வைத்தனர். 

அபாரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் சதமடித்து அசத்தினார். ரோகித் சதமடித்த சிறிது நேரத்திலேயே கில்லும் சதமடித்தார். தொடர்ந்து ரோகித் சர்மா 103 ரன்களிலும் , கில் 110 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து வந்த சரப்ராஸ் கான், படிக்கல் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தனர். தொடர்ந்து படிக்கல் 65 ரன்கள் , சர்ப்ராஸ் கான் 56 ரன்கள் எடுத்து வெளியேறினர். பின்னர் வந்த ஜடேஜா ,15 ரன்கள் , துருவ் ஜுரேல் 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

2வது நாளில் 120 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 473 ரன்கள் எடுத்து இருந்தது. இங்கிலாந்து சார்பில் சோயப் பஷீர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். குல்தீப் யாதவ் 27 ரன்களுடனும் , பும்ரா 18 ரன்களுடனும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் குல்தீப் யாதவ் 30 ரன்களிலும் அவரை தொடர்ந்து பும்ரா 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்தியா 477 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதனையடுத்து 259 ரன்கள் பின்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கி உள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!