வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வெவண்டன் எஸ்டேட் மக்கள்

அண்மைய அனர்த்தத்தில் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பாராமுகமாக செயற்பட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

டிசம்பர் 6, 2025 - 12:03
டிசம்பர் 6, 2025 - 12:40
வெள்ளம், மண்சரிவால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் வெவண்டன் எஸ்டேட் மக்கள்

அண்மையில் பெய்த கடும் மழை, மண்சரிவு மற்றும் வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம் ரம்பொடை, வெவண்டன், தவலன்தென்ன எஸ்டேட் மக்கள், இதுவரை தமக்கு எந்த உதவியும் நிவாரணமும் கிடைக்கவில்லை என்றும் தாங்கள் அனாதரவாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக நியூஸ்21 இணையத்தளத்துக்கு தெரிவித்தனர்.

அங்கு சுமார் 138 குடும்பங்களை சேர்ந்த 700க்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில்,  இத்தனை நாட்களாகியும், கிராம சேவகர் உள்ளிட்ட எந்தவொரு அரச அதிகாரிகளும் இதுவரை வந்து பாதிக்கப்பட்ட இடங்களையோ மக்களையோ  பார்க்கவில்லை என அந்த மக்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

எங்களுக்கு உதவி கிடைக்கவில்லை

“எமக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. பூண்டுலோயா பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் சில பொருட்களை சேகரித்து  எமக்கு நேற்று மாலை கொடுத்தார்கள். குழந்தைகள், சிறு பிள்ளைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் முதியவர்கள்  என  பலரும் துன்படுப்படுகின்றனர். எங்களுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க யாரும் இதுவரை முன்வரவில்லை” என,  நியூஸ்21 -இடம் பேசிய அங்கு வசிக்கும் ஜீவராணி தெரிவித்தார்.

இதேவேளை, உதவி செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ரம்பொடை, வெவண்டன் எஸ்டேட்டுக்கு சென்று உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். உதவிகளை வழங்குவதற்கும் விவரங்களை பெற்றுக்கொள்ள இந்த இலக்கத்துக்கு தொடர்பு கொள்ள முடியும். 

கமலேஸ்வரன் - +94 76 979 8439

அண்மைய அனர்த்தத்தில் மலையக மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக அரசியல்வாதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் பாராமுகமாக செயற்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் மக்கள் விசனம் வெளியிட்டு வரும் நிலையில், குறித்த வெவண்டன் தோட்டத்தில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இல்லமும் உள்ளதுடன், கடந்த பொதுத்தேர்தலில் ஜீவன் தொண்டமான் தனது வாக்கினை தவலன்தென்ன தமிழ் வித்தியாலயத்தில் பதிவு செய்திருந்திருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

பிறின்சியா டிக்சி

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!