மந்தைவெளி 2010 சம்பவ வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நீண்டகாலமாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

ஜனவரி 21, 2026 - 09:27
மந்தைவெளி  2010 சம்பவ வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் மரண தண்டனை

யாழ்ப்பாணம், கொடிகாமம் – மந்தைவெளி பகுதியில் 2010ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு மரண தண்டனை விதித்து, யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சூசைதாஸ் நேற்று திங்கட்கிழமை (20) தீர்ப்பளித்தார்.

2010ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் திகதி மந்தைவெளிப் பகுதியில் வசித்து வந்த 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர், கோடாரி மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நீண்டகாலமாக யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தது.

வழக்கில் எதிரிகள் சார்பில் மூத்த சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா முன்னிலையானார். வழக்குத் தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரச சட்டவாதி கா. நசிகேதன் வழக்கை நெறிப்படுத்தினார்.

சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை விரிவாக ஆய்வு செய்த நீதிபதி, எதிரிகள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்குத் தொடுநர் தரப்பு நிரூபித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து, மந்தைவெளி பிரதேசத்தைச் சேர்ந்த அந்த இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்த நீதிபதி, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!