பல மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வட-மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 01 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பதிவாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுடன் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடல் பகுதிகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசும் என்பதுடன், அதன் வேகம் மணிக்கு 25-35 கிலோமீற்றராக காணப்படும். இருப்பினும், சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் இக்கடற்பரப்புகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் ஆபத்துகளை குறைப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
வானிலை தொடர்பான மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ளவும், அவசர இடர் நிலைமைகளை அறிவிக்கவும் இடர் மேலாண்மை நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும்.

