இந்தோனேசியாவில் காணாமல்போன விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிப்பு
விமானத்தில் பயணம் செய்த 11 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தோனேசியாவில் காணாமல்போன கண்காணிப்பு விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (18) அறிவித்துள்ளனர். இருப்பினும், விமானத்தில் பயணம் செய்த 11 பேரை இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீன் பண்ணைகள் தொடர்பான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அந்த விமானம், Sulawesi தீவில் உள்ள மலைப்பகுதியில் நேற்று தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் எட்டு விமானப் பணியாளர்களும், மூன்று அரசாங்க ஊழியர்களும் பயணம் செய்திருந்தனர்.
சிதைவுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல்போன பயணிகளை மீட்கும் நடவடிக்கைக்காக சுமார் 1,200 அதிகாரிகள் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடினமான மலைப்பகுதி மற்றும் சவாலான சூழ்நிலைகளுக்கிடையே இந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன.
மேலும், இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வள அமைச்சகத்திற்கு சொந்தமான ATR 42-500 வகை விமானம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

