இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பணிநீக்கம் பெற்ற சுகாதாரத் தொழிலாளர்கள்

இலங்கையின் சமகாலப் பொருளாதார நெருக்கடியானது அனைத்துத் துறைகளையும் பாதித்துவருகின்றது. ஈஸ்டர் தாக்குதல், கொவிட்-19 தொற்று, அரசியல், பொருளாதார நிலைத்த தன்மையின்மை, அரகலய மக்கள் போராட்டம் போன்றவற்றை அடுத்து தோற்றம் பெற்றுள்ள சமூக அதிர்வுகள் குறித்த பொருளாதார நெருக்கடியினை தொடர்ச்சியாக அதிகரிக்கச் செய்தவண்ணமுள்ளன. இதனால் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில், ஒப்பந்த அடிப்படையில் தொழில்புரிந்த தொழிலாளர்களை ஒப்பந்தம் முடிவடைந்த காலப்பகுதியில், ஒப்பந்த மீள்நீடிப்பின்றி பணிநீக்கம் செய்கின்ற போக்கு அதிகரித்துவருகின்றது. அதிலும் குறிப்பாக, நாள் ஊதிய அடிப்படையில் தற்காலிகமாக பணிக்கமர்த்தப்பட்டவர்கள் முறையான முன்னறிவிப்பின்றி அவர்களது பணிகளில் இருந்து பணிநீக்கப்படுகின்றமை ஒரு முக்கிய பிரச்சினையாக இனம்காணப்பட்டுள்ளது.
பேராதனைப் பல்கலைக்கழக சுகாதார நிலையம் குறித்த பல்கலைக்கழ சுகாதார தொழிலாளர்களுக்குப் பொறுப்பாக உள்ளது. குறித்த அலகிடம் இருந்து பெறப்பட்ட தரவின் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பேராதனைப் பல்கலைக்கழத்தில் ஆறு சுகாதாரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று 97 சுகாதாரத் தொழிலாளர்கள் மாத்திரமே பணிபுரிகின்றனர். இது தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழக பொதுச்சேவைகள் பிரிவின் உதவி முகாமையாளர் எஸ்.பி.எம்.வலன்ஸ அவர்களிடம் வினவியபோது, '2021 ஆம் ஆண்டு 101 சுகாதாரத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஆறு ஊழியர்கள் அவர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த காலத்தில் மீள ஒப்பந்தம் நீடிக்கப்படாது பணியிலிருந்து நிறுத்தப்பட்டனர். இவர்கள் தொடர்பான அலுவல்கள் பல்கலைக்கழ சுகாதார நிலையத்தின் கீழ் வருகின்றது.
அத்துடன் இவர்கள் தொடர்பான தனிப்பட்ட விடயங்கள் எமக்கு தெரியாது. தனியார் நிறுவனங்களே அவர்களது தரவுகளைப் பேணுகின்றன. அத்துடன் தனியார் நிறுவனங்களோடு மாத்திரமே பல்கலைக்கழகத்தின் ஒப்பந்தம் இடம்பெறும். இதுபோல வேறும் சில ஊழியர்கள் அவர்களது ஒப்பந்த காலம் முவடைந்த நிலையில் நீக்கப்பட்டுள்னர். அவர்களது பணிநீக்கம் தொடர்பாக அவர்களது நிறுவனங்களால் அறிவுறுத்தப்படுவார்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். அத்துடன், இவர்கள் அரசாங்க கணக்காய்வு அறிக்கையின் அடிப்படையில் வேலையில் இருந்து இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக பொதுச் சேவைகள் பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவல் மூலம் உறுதிப்படுத்த முடிகின்றது.
நடப்பு வருடம் தை மாதம் வரை குறித்த ஒரு பெண்கள் விடுதியில்; சுகாதாரத் தொழிலாளராகப் பணிபுரிந்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் எட்டாம் திகதி இன்னுமொரு பெண்கள் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த பெண்களுடனான தகராறு காரணமாக அவர் வேலை செய்வதற்கு சிரமப்பட்டுள்ளார். ஆனாலும் குடும்ப சூழ்நிலையால் தொடர்ந்து வேலை செய்து வந்துள்ளார். நாட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், சம்பள அதிகரிப்பின்மை காரணமாகவும் பல்கலைக்கழகங்கள் பணியாளர்களைக் குறைப்பதற்கான திட்டமிடல்களை மேற்கொண்டுவருகின்றது என்ற செய்தியைக் கேள்விப்பட்டிருந்த போதும், அது அவரையும் பாதிக்கும் என அவர் அறிந்திருக்கவில்லை.
சுமதி (பெயர் மாற்றப்ட்டுள்ளது) 47 வயதான இவர், உடபேராதனையில் தன் கணவருடன் வசித்து வருகின்றார். இவரது வம்சாவழி இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டிருப்பினும், இவர் இலங்கையில் பிறந்த பெண். இவரது கணவன் இந்தியாவினைச் சேர்ந்தவர், திருமண உறவின் அடியாக இலங்கைப் பிரசையாக வாழ்ந்து வருகின்றார். மிகவும் வறுமையான நிலையில் பிள்ளைகள் அற்ற நிலையில் ஒருவருக்கு ஒருவர் மிகவும் அன்புடன் வாழ்ந்து வருகின்றனர். கடந்த நான்கு வருடமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பெண்கள் விடுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். அவருக்கு குறிப்பாக தான் எந்த நாளில் பணியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது தெரிந்திருக்கவில்லை. ஒரு சனிக்கிழமை அவர் வேலைக்குச் சென்ற போது, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் தன் இறுதி மாத ஊதியம் வழமையான ஊதியத்தினை விட குறைந்தளவே பெற்றுள்ளார்.
விமலாதேவி (பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தற்போது சுகாதாரத் தொழிலாளியாகப் பணிபுரிபவர்)'நிறைய பேரை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள், அதனால் அதிகரித்த வேலைப்பழு, இரண்டு மூன்று பேர் செய்யும் வேலைகளை நாங்களே செய்ய வேண்டியுள்ளது. ஆனாலும் ஊதியம் அதிகரிகப்படவில்லை. மாணவர்கள் தரம்பிரித்து உணவைக் குப்பைத்தொட்டிகளில் போடவேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தியும், முறையான குப்பைத்தொட்டிகளைக் கவனித்தும் நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது, ஆனாலும் அது நடைமுறையில் மாணவர்கள் உரிய முறையில் பின்பற்றுவது இல்லை. அத்துடன் கழிப்பறைகளுள் மண் மற்றும் சேற்றுக் கால்களுடன் வருகின்றனர். ஒரு நாளில் இரண்டு முறை கழிப்பறைகளை சுத்தம் செய்த போதும் அதனை தூய்மையாகப் பேண முடிவதில்லை, மிகவும் சிரமமாக உள்ளது. எங்களை பற்றியும் யோசிக்கணும் எல்லோ' என்கிறார்.
விமலாதேவி 40 வயதான சுகாதாரத் தொழிலாளி. இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட ஒரு துறையில் உள்ள ஒரு ஒரு பகுதியில் உள்ள கட்டங்களுக்குப் பொறுப்பான சுகாதாரத் தொழிலாளியாகப் பணிபுரிந்து வருகின்றார். கழிப்பறைச் சுத்தம் மற்றும் உணவுக் கழிவுகளைத் தரம் பிரிப்பது மற்றும் சூழலைத் தூய்மையாகப் பேணுவது (கூட்டுதல், மற்றும் கழுவுதல்) போன்ற பணிகளில் ஈடுபட்டுவருகின்றார்.
அவர் அண்மைக்காலமாக இடம்பெற்ற தூய்மைத் தொழிலாளர்களது எண்ணிக்கைக் குறைப்பால் தமக்கு ஏற்பட்டுள்ள வேலைச் சுமை தொடர்பாக பகிர்ந்து கொண்டதுடன், பணிநீக்கம் பெற்றவர்களது தொடர்பு இன்மையாலும்> அவர்கள் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டமையாலும், யார் யார் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தம்மிடம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட தரவின் அடிப்படையில், சுகாதாரத் தொழிலாளர்களது பணிநீக்கம் காரணமாக மாணவர்கள் தமது விடுதிகளில் குப்பைகளை தரம்பிரித்து குப்பைத் தொட்டிகளில் இடுவதற்கும், ஏனைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும் நடைமுறையில் அது சாத்தயமற்றதாக உள்ளது. எனவே நடப்பு நிலையில் உள்ள குறைந்தளவான ஊழியர்களுக்கு வேலைப்பழு அதிகரித்துள்ளது.
வேலை நிறுத்தம் தொடர்பான சில தனியார் நிறுவனங்கள் ஊடான கலந்துரையாடலின் அடிப்படையில் Ultrakleen தனியார் நிறுவனத்தின் பணியாளர் ஒருவரிடம் வினவிய போது 'ஒவ்வொரு பல்கலைக்கழகமும் ஒவ்வொரு வருடமும் தமக்கு வேண்டிய எண்ணிக்கையினை ஒரு ஏல அடிப்படையில் எமக்கு கொடுப்பார்கள், அதில் அவர்கள் வரையறுத்துள்ள எண்ணிக்கையினருக்கு எம் தொழிலாளர்களை வழங்குவோம்> சிலவேளை குறித்த எண்ணிக்கை சென்ற வருடத்தில் இருந்து குறைவாகவோ அல்லது அதிகமாகவோ காணப்படும். அந்த அடிப்படையில் இந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விடுதியில் பணிபுரிந்து வந்த ஆறு சுகாதாரப் பணியாளர்கள் குறைக்கப்பட்டுள்ளனர் (நடப்பு ஊழியர்களில் இருந்து அவர்களது ஒப்பந்தக் காலம் முடிவடைந்த ஆறு பேர் ஒப்பந்த நீடிப்பின்றி நீக்கப்பட்டனர்) இதில் சில பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையினரை அதிகரித்தும் உள்ளன.'எனக் குறிப்பிட்டார்.
பெரும்பாலான சுகாதாரத் தொழிலாளர்கள் சமூகத்தின் ஓரங்கட்டலுக்கு உட்படுகின்றனர். அவர்களது பொருளாதாரம் அவர்களது நாளாந்த கூலிகளை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. சம காலத்தில் உள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமின்மை, அதிகரித்த பொருட்களின் விலை மற்றும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் அவர்களது வேலை நேரத்தையும் குறைவடைய வைத்தள்ளது.
குறித்த சுகாதாரத் தொழிலாளர்களது ஒப்பந்த காலம் முடிவடைந்த நிலையில் அவர்கள் பணிநிக்கம் செய்யப்பட்டுள்ள போதும், அவர்கள் அது தொடர்பாக ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருக்கவில்லை. அவர்கள் தம் ஒப்பந்த காலம் மீள நீட்டிக்கப்படுமா இல்லையா? அல்லது எப்போது ரத்து செய்யப்படும் போன்ற தகவல்களைத் தெரிந்திருக்கவில்லை. குறிப்பாக அவர்கள் இந்த ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரான பணிநீக்கத்தை எதிர்பார்த்திருக்கவில்லை.
இந் நிலையில் இவர்கள் முன் அறிவித்தல் இன்றிய வேலைநிறுத்தம், தம் அன்றாட வாழக்கைச் செலவீனங்களை முகாமை செய்வதற்கு பாரிய சவால்களை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டனர். அது மட்டுமல்லாது அவர்களது சமூக காரணிகளால், உடனடியாக இன்னொரு வேலையில் இணைவதற்கான இயலுமை அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.
சாதி ரீதியான பாகுபாடு, சுகாதாரத் தொழிலாளர்கள் மீதான சமூகத்தினது பாரபட்சமும், அரசின் முறையான வளப் பங்கீடின்மையும், அவர்களது பொருளாதார ரீதியான பாதிப்பிற்கு மேலும் வலுச்சேர்க்கின்றது. நாள் அடிப்படையிலான ஊதியம் பெறுவதனால் முறையான தொழிற்சங்க உரிமைகளை கோருவது என்பது சாத்தியமற்றதாக உள்ளது. அத்துடன் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் இடையில் ஒருங்கிணைந்த அடிப்படையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சாத்தியத்திற்கான அறிமுகமும் இல்லாது தொழில்புரிவதற்கான சூழலே உள்ளது.
இலங்கையில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட நாள் ஊதியத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் தொழில்புரிபவர்களது உரிமைகள் தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான MR.R.K.M.Rajapaksha அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, 'தனியார் நிறுவனங்களின் கீழ் நாள் ஊதிய அடிப்படையில் ஒப்பந்த வேலைமேற்கொள்பவர்களுக்கு தொழிற்சங்கங்களை அமைப்பதற்கு உரிமை உள்ளது. ஆனாலும் அதன் நடைமுறைச் சாத்தியம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நாள் ஊதிய ஒப்பந்த வேலையாட்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு சர்வதேச சமூகங்கள் கூட ஊக்குவிப்பதில்லை. இது முதலாளித்துவதுவத்தின் வளர்ச்சிக்கான ஒரு வடிவமாகச் செயற்படுகின்றது.' எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடும் போது, 'குறித்த தொழிலாளர்கள் தாம் வேலையில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக அறிவுறுத்தப்படவேண்டும். அதாவது அவர்களது ஒப்பந்த காலம் முடியும் தறுவாயில் ஒரு மாத காலத்திற்கு முன்பாக அவர்களது ஒப்பந்த காலம் நீடிக்கப்பட உள்ளதா? அல்லது முடிவடைந்துள்ளதா? என்பது தொடர்பாக அறிவுறுத்தப்பட வேண்டும். ஆனாலும் அது இலங்கை போன்ற நாடுகளில் இடம்பெறுவதில்லை. அதிலும் குறிப்பாக ஒரு ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அவர்களது உரிமைகள் தொழில் இடங்களில் அதிகமாவே மீறப்படுகின்றன. குறிப்பாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படல், அதிகமான வேலை நேரம், வசவுச் சொற்களுக்கு ஆளாதல், துஷ்பிரயோகங்களுக்கு ஆளாதல், சுரண்டல் போன்ற பல்வேறு வகையான அநீதிகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் தொழிற்சங்கமாக ஒருங்கிணைந்தாலோ அல்லது தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்தாலோ அல்லது குறித்த நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தாலோ அவர்கள் ஏதேனும் காரணம் சுமத்தப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்படுவார்கள். எனவே நடைமுறை நிலை என்பது இவ்வாறு தான் உள்ளது. இந்நிலையில் இவர்களது தொழிற்சங்க உரிமைகள் தொடர்பான உரையாடல் இன்னமும் பேசுபொருளாகக்கூடவில்லை' எனக் குறிப்பிட்டார். எனவே அவர்கள் தம் உரிமைக்கான போராடுவது சாத்தியமற்றதாக உள்ளது.
பொதுவாக நோக்கும் போது, தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் தொழில்புரியும் குறித்த சுகாதார ஊழியர்கள் எந்தவொரு முறையான முன்னறிவிப்புமின்றி பணிகளிலிருந்து நீக்கப்படுகின்றனர். அவர்களது பொருளாதார நிலை, அடையாளம், கல்வி அறிவு போன்றவற்றின் அடிப்படையில் அவர்கள் தனியார் நிறுவனங்களில் தங்கிவாழ்பவர்களாக்கப்படுகின்றனர். இதனால் தமது உரிமைகள் மறுக்கப்படும் போதோ மீறப்படும் போதோ குரல் எழுப்ப முடியாதவர்களாகவே உள்ளனர். குறித்த சுகாதார ஊழியர்களது பணிநீக்கம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்கள் ஆளுக்காள், நிறுவனத்திற்கு நிறுவனம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. இது சுகாதாரத் தொழிலாளர்கள் சாரந்து காணப்படுகின்ற அலட்சியப்போக்கினையே எடுத்துக்காட்டுகின்றது.
ஆனால் இவ்வாறான பணிநீக்கமானது, அவர்களது கொள்முதல் திறனில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதால், அவர்களது அன்றாட வாழ்க்கை தொடர்பான அச்சுறுத்தலை அதிகரிக்கச் செய்துள்ளதுடன், மிகக் குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் அன்றாட வேலைகளைச் செய்யத் தூண்டியுள்ளது. இது அவர்களது தொழில்சார் பாதுகாப்பின்மையினை புலப்படுத்துகின்றது.
இவற்றைத் தொகுத்து நோக்கும் போது, ஒப்பந்த அடிப்படையிலான நாள் தொழிலாளர்களது உரிமை என்பது ஒரு சர்வதேச பிரச்சனையாகும். எனவே தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான உரையாடல்கள், தீர்வுத்திட்ட முன்மொழிவுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது. மேலும் தொழிற்சங்க ரீதியாக இவர்களை வலுவூட்டுவதும், இவர்களது உரிமைகள் மீறப்படும் போது அதனை ஒரு தொழிலாளர் பிரச்சனையாக முன்வைத்து, செயற்படுவதும் ஒப்பந்த அடிப்படையிலான நாள் ஊதிய தொழிலாளர்களது நீடித்த நலவாழ்விற்கான தொழில்சார் உறுதிப்படுத்தலை ஏற்படுத்தும்.தொழிற்சங்கங்கள், மற்றும் Protect Union போன்ற அமைப்புக்கள் நாள் ஊதிய அடிப்படையில் வேலை செய்வரர்களது உரிமை சாரந்த உரையாடல்கனை முன்னெடுக்க வேண்டும் அவற்றின் ஊடாக தீர்வுகளை நோக்கிய செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஆனாலும் முதலாளித்துவ கட்டமைப்பினுள் அது சாத்தியமற்றதொன்றாகவே காணப்படுகின்றது.
அத்துடன் சமகாலப் பொருளாதார நெருக்கடியில், இவ்வாறு தொழில்களை இழந்த தொழிலாளர்களுக்கு அரசு உடனடியாக மாற்று தொழில்சார் வழிகளை இனங்காட்டுவதுடன், அவர்களுக்கான புதிய தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்பட்டு, ஆரோக்கியமாக கல்வி அணுகலூடான பல்கலைக்கழக இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு பரம்பரை ரீதியாக சுகாதாரத் தொழிலாளர்களாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
(விதுர்ஷா -
பேராதனைப் பல்கலைக்கழகம்)
Mentoring and financial support by Internews