அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளது – அனுமதிப்பத்திர எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 15, 2025 - 18:48
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கி சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளது – அனுமதிப்பத்திர எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள பொண்டி கடற்கரையில் (Bondi Beach) நேற்று (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் துப்பாக்கி தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்குவது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்காக தேவையான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க அரசாங்கம் தயங்காது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் (Anthony Albanese) தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், ஒருவருக்கு வழங்கப்படக்கூடிய துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது, அவற்றை காலந்தோறும் மீளாய்வு செய்யும் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட விடயங்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 வயதுச் சிறுமி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 40 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட துப்பாக்கிதாரிகள் 50 வயதுடைய சஜிட் அக்ரம் மற்றும் அவரது 24 வயது மகனான நவீட் அக்ரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொலிஸ் மேற்கொண்ட நடவடிக்கையின் போது சஜிட் அக்ரம் உயிரிழந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், சஜிட் அக்ரம் 1998 ஆம் ஆண்டு மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்தார் என்றும், அவரது மகன் நவீட் அக்ரம் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் என்றும் கூறப்படுகிறது. நவீட் அக்ரம் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பொன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்பில் இருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

அதேபோல், சஜிட் அக்ரம் விலங்கு வேட்டைக்காக 2015 ஆம்ஆண்டிலிருந்து துப்பாக்கி அனுமதிப்பத்திரம் வைத்திருந்தவர் என்பதும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!