தரம் 6 ஆங்கில மொடியூல் சர்ச்சை: மூன்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட மொடியூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவகம் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கிலப் பாட மொடியூல் தொடர்பாக, தேசிய கல்வி நிறுவகம் உட்பட மூன்று அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் ஒழுங்கின்மை காரணமாகவே இந்த விவகாரம் உருவானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்மானங்களை எடுக்க அதிகாரம் பெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் நிர்வாகக் குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, தேசிய கல்வி நிறுவகத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி தர்ஷன சமரவீர கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். மேலும், அதே நிறுவகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரண, விசாரணை முடிவடையும் வரை தனது பதவியிலிருந்து விலக முடிவு செய்திருந்தார்.
இவ்வருடம் அறிமுகப்படுத்தப்படவிருந்த தரம் 6 ஆங்கில மொழித் தொகுதியில், பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் உள்ளடக்கப்பட்டிருந்தமை இந்த சர்ச்சைக்கு காரணமாக அமைந்தது. இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அந்த மொடியூலின் விநியோகத்தை இடைநிறுத்துவதாக கல்வி அமைச்சகம் அறிவித்தது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்துவரும் சூழலில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முறைப்பாடு ஒன்றை அளித்திருந்தார்.
இதனிடையே, தரம் 6 தொடர்பான முன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பை 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். (News21)

