வெற்றியின் அருகே வந்து இந்தியா தோல்வி; தென்னாப்பிரிக்கா திரில் வெற்றி
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Women's World Cup), தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பத்தாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் அருகே வந்தும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்திய அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Women's World Cup), தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பத்தாவது லீக் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றியின் அருகே வந்தும் தோல்வியைத் தழுவியுள்ளது. இதன் மூலம் நடப்பு தொடரில் இந்திய அணி தனது முதல் தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணியில், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தானா 23 ரன்களும், பிரதிகா ராவல் 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஹர்லின் தியோல் 13 ரன்களிலும், கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் ஒன்பது ரன்களிலும் மட்டுமே எடுத்தனர். நடுவரிசையில் களம் இறங்கிய இளம் நட்சத்திரம் ஜெமிமா டக் அவுட் ஆனார், மேலும் தீப்தி சர்மா நான்கு ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தி, இந்திய அணி 102 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அப்போது களத்திற்கு வந்த ரிச்சா கவுஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு நம்பிக்கை அளித்தார். அவர் நான்கு சிக்ஸர், 11 பவுண்டரிகள் என மிரட்டி, 77 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவருக்கு சினே ரனா 33 ரன்கள் எடுத்துத் துணையாக நின்றார். இறுதியில், இந்திய மகளிர் அணி 49.5 ஓவரில் 251 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென்னாப்பிரிக்க அணிக்கு 252 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க விராங்கனை தஸ்மின் டக் அவுட்டானார். சூனே லஸ் 5 ரன்களிலும், மர்ஜியாணி 20 ரன்களிலும், போஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில், தென்னாப்பிரிக்க அணி 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், கேப்டன் லாரா 70 ரன்கள் சேர்த்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினார்.
லாராவும் ஆட்டம் இழந்தபோது, தென்னாப்பிரிக்க அணி 142 ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் அருகே சென்றது.
ஆட்டத்தின் இறுதி கட்டத்தில், நதைன் கிலர்க் (Nadine de Klerk) அபாரமாக விளையாடி தென்னாப்பிரிக்க அணிக்கு உயிரூட்டினார். அவருக்கு சோலே ட்ரையோன் (Chloe Tryon) 49 ரன்கள் எடுத்து நல்ல கம்பெனி கொடுத்தார். நதைன் தனி ஆளாகப் போராடியதால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஒரு கட்டத்தில் ட்ரையான் 49 ரன்களில் வெளியேற, தென்னாபிரிக்க அணி 211 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நான்கு ஓவர்களில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு 41 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போது ஆட்டத்தின் 47வது ஓவரில் கிளர்க் 2 சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 18 ரன்கள் அடித்தார். இது போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தொடர்ந்து, 48வது ஓவரில் இரண்டு பவுண்டரி உட்பட 11 ரன்களும், 49வது ஓவரில் இரண்டு சிக்ஸர்களும் அவர் அடித்தார். கிளர்க் 54 பந்துகளில் 84 ரன்கள் குவித்து, தென்னாப்பிரிக்க அணி 48.5வது ஓவரிலே வெற்றி இலக்கை எட்டி அசத்த உதவியுள்ளார்.