நள்ளிரவில் மார்பில் சுருண்ட மலைப்பாம்பு – அமைதியால் உயிர்தப்பிய ஆஸ்திரேலிய பெண்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேச்சல் ப்ளூர் என்ற பெண், திங்கட்கிழமை நள்ளிரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை சந்தித்தார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ரேச்சல் ப்ளூர் என்ற பெண், திங்கட்கிழமை நள்ளிரவில் தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியூட்டும் அனுபவத்தை சந்தித்தார். தூக்கம் கலைந்து விழித்தபோது, தன் மார்பின் மீது கனமான ஒரு பொருள் இருப்பதை அவர் உணர்ந்தார். முதலில் அது தனது செல்ல நாய்க்குட்டி என நினைத்து கையால் தொட்டபோது, வழுவழுப்பாகவும் நெளிந்துகொண்டும் இருந்ததால் அது நாய் அல்ல என்பது அவருக்கு புரிந்தது.
அதிர்ச்சியில் உறைந்த ரேச்சல், போர்வையை கழுத்து வரை இழுத்துக்கொண்டு அசையாமல் படுத்திருந்தார். அப்போது அருகில் தூங்கிக் கொண்டிருந்த அவரது கணவர் விளக்கை ஏற்றியதும், படுக்கையில் சுருண்டு கிடந்தது சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள மலைப்பாம்பு என்பது தெரிய வந்தது. “அசையாதே, உன் மேல் பெரிய பாம்பு இருக்கிறது” என்று கணவர் சொன்னதாக ரேச்சல் பின்னர் தெரிவித்தார்.
முதல் சில நொடிகள் பேச்சு தடுமாறிய ரேச்சல், தன்னை சமாளித்துக் கொண்டு அறையில் இருந்த செல்லப்பிராணிகளை உடனடியாக வெளியேற்றும்படி கணவரிடம் கேட்டார். குறிப்பாக தனது டால்மேஷியன் நாய் பாம்பை உணர்ந்தால் நிலைமை மோசமாகிவிடும் என அவர் அச்சமடைந்தார். கணவர் நாய்களை பாதுகாப்பாக வெளியே அழைத்துச் சென்றார்.
அதன்பின், மிகுந்த பொறுமையுடன் ரேச்சல் தன் மீது படுத்திருந்த பாம்பிடமிருந்து மெதுவாக நழுவத் தொடங்கினார். “இது உண்மையா, எவ்வளவு விசித்திரமான தருணம்” என்று மனதிற்குள் நினைத்தபடியே போர்வையிலிருந்து மெதுவாக வெளியே வந்ததாக அவர் கூறினார். அந்த பாம்பு விஷமற்ற ‘கார்ப்பெட் மலைப்பாம்பு’ என்றும், ஜன்னல் கதவின் இடுக்குகள் வழியாக நுழைந்து படுக்கையில் விழுந்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகிக்கிறார்.
மெல்ல மெல்ல பாம்பை அது வந்த வழியாகவே வெளியே தள்ளிய ரேச்சல், அந்த அளவுக்கு பெரிய பாம்பு தன் மேல் சுருண்டு கிடந்தபோதும் அதன் வால் பகுதி ஜன்னலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்ததாக கூறினார். பாம்பை கையால் பிடித்தபோதும் அது பெரிதாக பயந்ததாக தெரியவில்லை என்றும், இயல்பாகவே நெளிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்தில் ரேச்சலின் கணவர் அதிர்ச்சியில் உறைந்திருந்தாலும், பாம்புகள் அதிகம் உள்ள பகுதியில் வளர்ந்தவர் என்பதால் ரேச்சல் அமைதியாக இருந்தார். “நாம் அமைதியாக இருந்தால், அவையும் அமைதியாக இருக்கும்” என்பதே தனது நம்பிக்கை என்று அவர் கூறினார். இருப்பினும், அந்த இடத்தில் பாம்புக்கு பதிலாக ஆஸ்திரேலியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘கரும்பு தேரை’ இருந்திருந்தால் தன்னால் சமாளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ரேச்சலுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், செல்லப்பிராணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆஸ்திரேலியாவின் கடற்கரைப் பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் கார்ப்பெட் மலைப்பாம்புகள் விஷமற்றவை என்றும், பறவைகள் மற்றும் சிறிய விலங்குகளை உண்ணும் இனத்தைச் சேர்ந்தவை என்றும் கூறப்படுகிறது.

