அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடக தடை – நள்ளிரவு முதல் அமல்!
இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), யூடியூப், ஸ்னாப்சாட் போன்ற பிரபல சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
அவுஸ்திரேலியாவில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு இன்று (நள்ளிரவு முதல்) தடை அமலுக்கு வருகிறது. இந்த முடிவு, குழந்தைகளின் மன மற்றும் உடல் நலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், சமூக ஊடகங்களின் அதிகரித்து வரும் பயன்பாடு குழந்தைகளின் மனநலத்திற்கும், உடல்நலத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார். இதைத் தடுக்கும் நோக்கில், 'ஒன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் – 2024' நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டொக், எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்), யூடியூப், ஸ்னாப்சாட் போன்ற பிரபல சமூக ஊடகங்களில் கணக்கு தொடங்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது.
அவுஸ்திரேலிய அரசாங்கம், ஏற்கனவே இருக்கும் கணக்குகளை நீக்குவதற்கு டிக்டொக், மெட்டா (Meta), எக்ஸ் (X) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய பயனர்களின் வயதைச் சரிபார்க்கக்கூடிய தொழில்நுட்ப முறைகளை இந்நிறுவனங்கள் உடனடியாக நிறுவ வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்த தடையை மீறும் சமூக ஊடக நிறுவனங்களுக்கு, அதிகபட்சம் 50 மில்லியன் அவுஸ்திரேலிய டாலர்கள் (சுமார் 297 கோடி இந்திய ரூபாய்) வரை அபராதம் விதிக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே எச்சரித்துள்ளது.
இந்த தடை சட்டம், உலகின் மிகக் கடுமையான சமூக ஊடக ஒழுங்குமுறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது குழந்தைகளின் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் நல்வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பாதுகாப்பு அரணாக அமையும் என அரசாங்கம் நம்புகிறது.