உலகின் மிகப்பெரிய நகரம் இனி டோக்கியோ அல்ல — முதலிடத்தை பிடித்த ஜகர்த்தா
மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரம் என்ற பட்டியலில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருந்த ஜப்பான் தலைநகர் டோக்கியோ, தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரம் என்ற பட்டியலில் நீண்ட காலம் முதல் இடத்தில் இருந்த ஜப்பான் தலைநகர் டோக்கியோ, தற்போது அந்த இடத்தை இழந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறை வெளியிட்ட World Urbanization Prospects 2025 அறிக்கையின் படி, இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தா தற்போது உலகின் மிக அதிக மக்கள் தொகையுடைய நகரமாக உயர்ந்துள்ளது.
சுமார் 40 மில்லியன் மக்கள் தொகையுடன், ஜகர்த்தா முதலிடத்தை பிடித்துள்ளது. அதே அளவிற்குச் சமமான மக்கள் தொகையுடன் வங்கதேச தலைநகர் டக்கா (Dhaka) இரண்டாவது இடத்தில் உள்ளது. 2050 ஆம் ஆண்டில் டக்கா உலகின் முதல் இடத்தைப் பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
முன்னணியில் இருந்த டோக்கியோ, தற்போது 33 மில்லியன் மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகின் முதல் 10 அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் பெரும்பாலானவை ஆசியாவில் உள்ள நகரங்களே. ஆசியாவைச் சாராத ஒரே நகரம் எகிப்து தலைநகர் கெய்ரோ, இது 32 மில்லியன் மக்கள் தொகையுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
2025 முன்னணி 10 அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் (UN 2025 Report):
-
ஜகர்த்தா, இந்தோனேசியா — 40 மில்லியன்
-
டக்கா, வங்கதேசம் — 40 மில்லியன்
-
டோக்கியோ, ஜப்பான் — 33 மில்லியன்
-
கெய்ரோ, எகிப்து — 32 மில்லியன்
-
புது தில்லி, இந்தியா — 30.2 மில்லியன்
-
ஷாங்காய், சீனா — 29.6 மில்லியன்
-
குவாங்சோ, சீனா — 27.6 மில்லியன்
-
மணிலா, பிலிப்பைன்ஸ் — 24.7 மில்லியன்
-
கொல்கத்தா, இந்தியா — 22.5 மில்லியன்
-
சியோல், தென் கொரியா — 22.5 மில்லியன்
மெகா நகரங்கள் வேகமாக அதிகரிக்கின்றன
1975 ஆம் ஆண்டில் 10 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையுடன் உலகில் 8 நகரங்கள் மட்டுமே இருந்தன. 2025 வரையில் இந்த எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது, இதில் 19 நகரங்கள் ஆசியாவில் உள்ளன.
2050 ஆம் ஆண்டில் மெகா நகரங்கள் 37 ஆகும் என UN கணிக்கிறது.
மேலும்,
-
அடிஸ் அபாபா (எத்தியோப்பியா),
-
டார் எஸ் சலாம் (தான்சானியா),
-
ஹாஜிபூர் (இந்தியா),
-
கோலாலம்பூர் (மலேசியா)
ஆகிய நகரங்களும் விரைவில் 10 மில்லியனைக் கடந்து மெகா நகரங்களாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.