எரிபொருள் தட்டுப்பாடு என்பது பொய்ப் பிரசாரம்! - அடுத்த 60 நாட்களுக்குப் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: மத்திய அரசு விளக்கம்!

மேற்காசியப் போர்ச் சூழலால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியைக் கிளப்பும் தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி கையிருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு என்பது பொய்ப் பிரசாரம்! - அடுத்த 60 நாட்களுக்குப் பெட்ரோல், டீசல் கையிருப்பு உள்ளது: மத்திய அரசு விளக்கம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவிற்குத் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதி நிலவி வருகிறது. இதனால் சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி, பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவியத் தொடங்கினர். 

இந்தச் சூழலில், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வியாழக்கிழமை (மார்ச் 26, 2026) ஒரு விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. "நாட்டில் எங்கும் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை; இது உள்நோக்கம் கொண்ட பொய்ப் பிரசாரம்" என்று அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்காசிய நெருக்கடியின் 27-ஆவது நாளில் நாம் இருக்கும் போதிலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் பூமிக்கடியில் உள்ள உத்திசார் கையிருப்புகள் (Strategic Reserves) தயார் நிலையில் உள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி பதற்றங்களுக்கு மத்தியிலும், இந்தியா தனது கச்சா எண்ணெய் கொள்முதலைச் சீராகப் பராமரித்து வருகிறது. தற்போது 41-க்கும் மேற்பட்ட நாடுகளிடம் இருந்து கூடுதலாகக் கொள்முதல் செய்யப்படுவதால் விநியோகத்தில் எவ்வித இடைவெளியும் இல்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உலக அளவில் 4-ஆவது பெரிய சுத்திகரிப்பு நாடாக இந்தியா உள்ளதால், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எல்பிஜி தட்டுப்பாடு குறித்த அச்சத்தையும் மத்திய அரசு நிராகரித்துள்ளது.

தினசரி உள்நாட்டு உற்பத்தி 40 சதவீதம் உயர்த்தப்பட்டு, 50,000 டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் தேவையில் 60 சதவீதத்திற்கும் மேலாகும்.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து 8 லட்சம் டன் எல்பிஜி இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இந்தியாவின் 22 எல்பிஜி முனையங்களுக்கு வந்தடைந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் அடுத்த ஒரு மாத காலத்திற்குத் தடையற்ற சமையல் எரிவாயு விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேசிய அவசரநிலை அல்லது பெட்ரோல் நிலையங்கள் மூடல் போன்ற எந்தவொரு நடவடிக்கையையும் இந்தியா மேற்கொள்ளவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ள அமைச்சகம், சமூக ஊடகங்களில் வதந்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 

சிறிய நகரங்களில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT