புதுடெல்லியில் மாணவர் போராட்டம் தீவிரம்: நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றவர்கள் மீது பொலிஸார் தடியடி
இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் மாணவர்கள் மற்றும் அரசுக்கு எதிரான அமைப்புகள் முன்னெடுத்த போராட்டம், இன்று (20) பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியது. நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களை தடுக்க கலகத் தடுப்பு பொலிஸார் தடியடி நடத்தி, பலரை அப்புறப்படுத்தினர்.
இந்தப் போராட்டம், மத்திய கல்வியமைச்சர் பதவி விலக வேண்டும் என்பதையும், நாட்டின் தேர்வு முறையில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நடத்தப்பட்டது. CJP (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் மாணவர் குழுக்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
சமீப காலமாக இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு, தொழில்நுட்பக் கோளாறுகள், தேர்வு ரத்து போன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. இதனால் கோடிக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் தேர்வு முறைமை மீதான நம்பிக்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
போராட்டம் நடைபெறவிருந்த பகுதிகளில் முன்கூட்டியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நாடாளுமன்றம் மற்றும் முக்கிய அரச கட்டிடங்களைச் சுற்றி ஏராளமான பொலிஸார் மற்றும் துணை இராணுவப் படையினர் குவிக்கப்பட்டனர். அனுமதியின்றி பேரணி நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் பேரணியை முன்னெடுக்க முயன்றனர். இதையடுத்து, போராட்டக்காரர்களை தடுப்பதற்காக பொலிஸார் தடுப்பணைகளை அமைத்து, பின்னர் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். சிலர் காவலில் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு புதுடெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகளுக்கும் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெருமளவிலான மக்கள் கூடுவதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த வார இறுதியில் காலவரம்பற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், உடல்நலக் குறைவு காரணமாக அதிகாரிகளால் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவமும் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த நடவடிக்கையை கண்டித்தும், கல்வி மற்றும் மாணவர் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
