ஐபோனுக்காக பள்ளி முதல்வருக்கு 27 கத்திக்குத்து! 10ஆம் வகுப்பு மாணவர்களின் அதிர்ச்சி திட்டம்

சம்பவம் நடைபெற்ற நாள் பள்ளியில் கட்டணம் வசூலிக்கும் நாளாக இருந்ததால், முதல்வரின் வீட்டில் அதிகளவு பணம் இருக்கும் என மாணவர்கள் நம்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஐபோனுக்காக பள்ளி முதல்வருக்கு 27 கத்திக்குத்து! 10ஆம் வகுப்பு மாணவர்களின் அதிர்ச்சி திட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியாவின் தெலங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில், ஐபோன் மற்றும் பணத்துக்காக தனியார் பள்ளி முதல்வரை 27 முறை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக 10ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியின் முதல்வரான ரூபா ரெட்டி, கடந்த ஆகஸ்ட் 11ஆம் திகதி தனது வீட்டில் தனியாக இருந்தபோது கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் முக்கிய துப்பு, உயிரிழந்த முதல்வர் தனது அத்தையுடன் இறுதியாக மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் இருந்து கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த உரையாடலின்போது அவர் ‘பாபு’ எனக் குறிப்பிட்டதாகவும், அந்தச் சொல் மாணவர்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுவதால் விசாரணை பள்ளி மாணவர்களை நோக்கித் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவத்துக்குப் பின்னர் இரு மாணவர்களும் திடீரென அதிகளவில் பணம் செலவு செய்ததுடன், நண்பர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இரு மாணவர்களும் புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரிடமிருந்து ரூ.1.51 இலட்சம் ரொக்கப் பணமும் ஐபோன் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மீட்கப்பட்ட பணத்தில் மனித ரத்தக் கறைகள் காணப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷரத் சந்திர பவார் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலைச் சம்பவத்துக்கு சுமார் 15 நாட்களுக்கு முன்னர், மாணவர் ஒருவர் பள்ளி வளாகத்தில் பணம் மற்றும் செல்போனை வைத்திருந்தது முதல்வர் மற்றும் ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இதையடுத்து அவர் கண்டிக்கப்பட்டு, விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மாணவரிடம் பழிவாங்கும் எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலும், சம்பவம் நடைபெற்ற நாள் பள்ளியில் கட்டணம் வசூலிக்கும் நாளாக இருந்ததால், முதல்வரின் வீட்டில் அதிகளவு பணம் இருக்கும் என மாணவர்கள் நம்பியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே இருவரும் கொலைத் திட்டத்தை வகுத்ததாகவும், இதற்காக கத்தி மற்றும் கையுறைகளை வாங்கியதுடன், வீட்டைச் சுற்றியிருந்த சிசிடிவி கேமராக்களில் சிக்காமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஓகஸ்ட் 11ஆம் திகதி, மாணவர்களில் ஒருவர் சுவர் ஏறி வீட்டுக்குள் நுழைந்து பணத்தைத் தேடியுள்ளார். அப்போது முதல்வர் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததாகவும், தன்னை அடையாளம் கண்டுகொள்வார் என்ற அச்சத்தில் அந்த மாணவர் அவரை கத்தியால் 27 முறை குத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் சுமார் ரூ.2.5 இலட்சம் பணத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்ற மாணவர், தான் அணிந்திருந்த ஆடைகளை வழியில் உள்ள வடிகாலில் வீசி எறிந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களும் சிறுவர் நீதிச் சபையான Juvenile Justice Board முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT