பிரதமர் மோடியை வரவேற்க கனடா தயார்: வர்த்தகப் பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க பிரதமர் மார்க் கார்னி முனைப்பு
கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான சுதந்திர வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் சிறந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்குள் இப்பேச்சுவார்த்தைகளை முழுமையாக நிறைவு செய்ய இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்த காலப்பகுதியில் கனடாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்வார் என இந்தியா உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்த அவர், விஜயத்திற்கான சரியான திகதி இதுவரை இறுதி செய்யப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தொடரின் பக்கவாட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய கனடா பிரதமர், இந்திய பிரதமருடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
அமெரிக்காவின் மியாமியில் உள்ள ட்ரம்ப் நஷனல் டோராலில் டிசம்பர் 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள ஜி20 உச்சி மாநாட்டிற்குள் இருதரப்பு விரிவான வர்த்தக உடன்படிக்கையை முடிவுக்குக் கொண்டுவர தாமும் இந்தியப் பிரதமர் மோடியும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் கீழ் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, அமெரிக்கா மீதான பொருளாதாரத் தங்கியிருப்பை குறைக்கும் நோக்கில் கனடா இந்த நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.
அடுத்த பத்தாண்டுகளில் அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளுடனான வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் பிரதான அங்கமாக இந்தியாவை கனடா இணைத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, கடந்த வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது இணை அங்கத்துவ நாடாக இணைவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய மார்க் கார்னி, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவுடனும் குறிப்பிட்ட சில வர்த்தக இணக்கப்பாடுகளை எட்டியிருந்தார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, கனடா மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் கடும் விரிசல் ஏற்பட்டது. இந்திய அரசாங்கத்தின் முகவர்களே இக்கொலைக்கு பின்னணியில் செயற்பட்டதாக முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியதை அடுத்து, இரு நாடுகளும் பரஸ்பரம் இராஜதந்திரிகளை வெளியேற்றியிருந்தன.
இருப்பினும், புதிய பிரதமர் மார்க் கார்னி பதவியேற்ற பின்னர் உறவுகளை மீளக் கட்டியெழுப்புவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதுடன், இவ்வருட தொடக்கத்தில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு கடந்த மார்ச் மாதத்தில் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருந்தார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.