கனடாவில் உள்ள 200,000 தற்காலிக வதிவிடவாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை: புதிய திட்டம் அறிவிப்பு

கனடாவில் தற்காலிகமாக வசித்து வரும் இரண்டு இலட்சம் பேருக்கு 2027 ஆம் ஆண்டுக்குள் நிரந்தர வதிவிட உரிமை வழங்கும் புதிய திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் இந்த வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

கனடாவில் உள்ள 200,000 தற்காலிக வதிவிடவாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை: புதிய திட்டம் அறிவிப்பு
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடாவில் ஏற்கெனவே வசித்து வரும் தகுதியுடைய இரண்டு இலட்சம் வரையான தற்காலிக வதிவிடவாளர்களுக்கு, எதிர்வரும் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதற்கான புதிய திட்டங்களை கனேடிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் வகையிலும், தேங்கிக்கிடக்கும் குடிவரவு விண்ணப்பங்களை விரைவாக பரிசீலிக்கும் நோக்கிலும் இந்த விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடாவின் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு -செலவுத் திட்டம் மற்றும் 2027 முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான குடிவரவு இலக்குகள் திட்டத்தின் கீழ் இந்த புதிய நடைமுறை உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் நாட்டில் ஏற்கெனவே தற்காலிக அடிப்படையில் வசித்து வரும் நபர்கள் நிரந்தர வதிவிட அந்தஸ்தைப் பெற்றுக்கொள்வதற்கான கூடுதல் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தின் தகவலின்படி, இந்த விசேட திட்டம் தொழிலாளர்கள் மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான விண்ணப்பதாரிகள் ஆகிய இரண்டு முக்கிய பிரிவுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதில் தொழிலாளர்கள் பிரிவின் கீழ், கனடாவில் ஏற்கெனவே வசித்து வரும் ஒரு இலட்சம் வரையான நபர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தெரிவு செய்யப்பட்ட விசேட குடிவரவு வழிகள் ஊடாக நிரந்தர வதிவிட உரிமை வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படவுள்ளது.

மாகாண ரீதியான தொழிலாளர் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தகுதியான தொழிலாளர்களை அடையாளம் காண்பதற்கு, கனேடிய மத்திய அரசாங்கம் மாகாண மற்றும் பிராந்திய நிர்வாகங்களுடன் இணைந்து செயற்படவுள்ளது. குறிப்பாக மாகாண பரிந்துரைத் திட்டத்தின் கீழ் தகுதிபெறும் நபர்களுக்கும், அட்லாண்டிக் குடிவரவுத் திட்டம், புத்தாக்க விசா திட்டம், விவசாய-உணவு முன்னோடித் திட்டம் மற்றும் இல்ல பராமரிப்புப் பணியாளர்களுக்கான திட்டங்களின் கீழ் ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் இதன்மூலம் நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏனைய ஒரு இலட்சம் இட ஒதுக்கீடுகள் மனிதாபிமான மற்றும் குடும்ப மீளிணைவு விவகாரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் பல வருடங்களாக நிரந்தர வதிவிட அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்கள், மனிதாபிமான மற்றும் கருணை அடிப்படையில் விண்ணப்பித்தவர்கள், உக்ரைன் மற்றும் ஹொங்கொங் விசேட குடிவரவுப் பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்தவர்கள் நன்மையடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு சமூகங்களில் ஏற்கெனவே இணைந்து வாழும் நபர்களைத் தக்கவைத்துக்கொள்வதோடு, தொழிலாளர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை குறைப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என கனேடிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

அதேவேளை, 2027 முதல் 2029 வரையான ஒவ்வொரு ஆண்டிலும் தலா 380,000 பேருக்கு நிரந்தர வதிவிட அனுமதியும், 370,000 புதிய தற்காலிக வதிவிடவாளர்களுக்கான அனுமதியும் வழங்குவதை கனடா தனது வருடாந்த இலக்காக நிர்ணயித்துள்ளது. 

இந்த புதிய இரண்டு இலட்சம் பேருக்கான விசேட திட்டம் வழக்கமான வருடாந்த ஒதுக்கீடுகளுக்கு அப்பால் மேலதிக வாய்ப்பாக அமையவுள்ளது.

எனினும், கனடாவில் உள்ள அனைத்து தற்காலிக வதிவிடவாளர்களுக்கும் இந்த நிரந்தர வதிவிட உரிமை தானாகவே கிடைக்காது எனவும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். உரிய குடிவரவுப் பிரிவுகளின் தகைமை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். 

இந்த புதிய வேலைத்திட்டத்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்காக 302.3 மில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்குவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT