மீனவர்களை மீட்க நடவடிக்கை – பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்

பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், மேகதாது அணைக்கு அனுமதி அளிக்கக் கூடாது, தமிழ்நாட்டு மீனவர்களையும் படகுகளையும் மீட்க இலங்கையை வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.

மீனவர்களை மீட்க நடவடிக்கை – பிரதமர் மோடியிடம் முதல்-அமைச்சர் விஜய் வைத்த முக்கிய கோரிக்கைகள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் இன்று (27.05.2026) புதுடெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இந்த மரியாதை நிமித்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டுக்கான பல முக்கிய கோரிக்கைகளைப் பிரதமரிடம் முதல்-அமைச்சர் முன்வைத்தார்.

இந்தச் சந்திப்பின்போது, நெதர்லாந்து பயணத்தின்போது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்தமைக்குப் பிரதமருக்கு முதல்-அமைச்சர் விஜய் நன்றி தெரிவித்தார். மாநில வாழ்த்துப் பாடலான `தமிழ்த்தாய் வாழ்த்து’ தமிழ்நாட்டின் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் பாரம்பரியமாகப் பாடப்பட்டு வரும் நிலையில், சில நிகழ்ச்சிகளில் தேசியப் பாடல் முதலில் பாடப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலைப் பாடுவது குறித்து உள்துறை அமைச்சகம் உரிய தெளிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து, மேம்பட்ட நடுத்தர போர் விமான (AMCA) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு மையம், வான்வழி அமைப்பு மையம் (CABS) ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் அமைப்பது தொடர்பாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (DRDO) பல ஆண்டுகளாக ஆலோசனைகள் நடைபெறும் நிலையில், வான்வழி அமைப்பு மையத்தைத் (CABS) தமிழ்நாட்டில் அமைக்குமாறும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைத் திட்டத்திற்கான பூமி பூஜை நடத்தவுள்ளதாக கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி அறிவித்திருப்பது, காவிரி நடுவர் மன்ற (CWDT) இறுதித் தீர்ப்புக்கும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கும் முற்றிலும் முரணானது என்றும், இது தமிழ்நாட்டு விவசாயிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் முதல்-அமைச்சர் வலியுறுத்தினார். எனவே, தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய இணை ஆற்றுப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று ஜல் சக்தி அமைச்சகத்துக்கும், மத்திய நீர்வள ஆணையத்துக்கும் அறிவுறுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்பட்டுத் துன்புறுத்தப்படும் நிலை மிகவும் கவலைக்கிடமாக உயர்ந்துள்ளதாக முதல்-அமைச்சர் எடுத்துரைத்தார். 2026-ம் ஆண்டில் மட்டும் 12 கைது சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், தற்போது 58 மீனவர்கள் இலங்கைச் சிறைகளில் உள்ளனர் என்றும், 266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்த அவர், மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT