அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு 150 பில்லியன் ரூபா: ஜனாதிபதி அநுர அறிவிப்பு
2028ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக 150 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் வகையில் அரச துறையினரின் தற்போதைய போராட்டங்களுக்குப் பின்னால் திட்டமிட்ட சதியொன்று இருப்பதாகக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி, அரச நிதிக்கு மேலதிக சுமையை ஏற்படுத்தும் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் அடிபணியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
'வரவு செலவுத் திட்டமும் உழைக்கும் மக்களும்' என்ற தொனிப்பொருளில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு மேலதிக சம்பள உயர்வுகளையும் கொடுப்பனவுகளையும் வழங்குவதாயின், அரசாங்கம் மேலும் கடன் பெற வேண்டியிருக்கும் அல்லது மூலதனச் செலவினங்கள், சுகாதாரம் மற்றும் ஏனைய அத்தியாவசிய துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்க வேண்டியிருக்கும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி விரிவுபடுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும், இதன் காரணமாக மூலதனச் செலவினங்களைக் குறைப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 6,230 பில்லியன் ரூபாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்ற போதிலும், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன் சேவை உள்ளிட்ட செலவினங்கள் 7,035 பில்லியன் ரூபாவாகக் காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, 805 பில்லியன் ரூபா நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்குக் கடன் பெற வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான கடன் பெறும் உச்சவரம்பு 3,800 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மூலதனச் செலவினங்கள் மற்றும் சமூக நலன்புரித் திட்டங்களுக்கான நிதியையும் கடன் மூலமே பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின்போது அரசாங்கம் 700 பில்லியன் ரூபா வங்கி மேலதிகப் பற்றுடன் (Overdraft) செயற்பட்டதாகவும், தற்போது திறைசேரியில் 700 பில்லியன் ரூபா வைப்புத் தொகையாக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அரச நிதியில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கருத்திற்கொள்ளாமல் அனைத்து சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுக் கோரிக்கைகளையும் நிறைவேற்றினால், நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரவு செலவுத் திட்டத்திற்கு மேலதிக சுமையை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டை நெருக்கடிக்குள் தள்ளுவதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அரசாங்கம் அந்தப் பொறிக்குள் சிக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2028ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 400 பில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதில் 250 பில்லியன் ரூபா மூலதனச் செலவினங்களுக்காகவும், 150 பில்லியன் ரூபா அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காகவும் ஒதுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதிகபட்ச தனிநபர் வருமான வரி வீதமான 36 சதவீதம் நடைமுறைக்கு வரும் மாதாந்த வருமான எல்லையை 2028ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 500,000 ரூபாவாக உயர்த்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதைய வரி முறையின்படி, மாதாந்தம் 358,333 ரூபாவுக்கு அதிகமான வருமானத்தின் உரிய பகுதிக்கு 36 சதவீத வரி வீதம் நடைமுறைக்கு வருகின்றது. இந்த வருமான எல்லையை 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 433,333 ரூபாவாக உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
மேலும், மதக் குழுக்களையும் உழைக்கும் மக்களையும் பயன்படுத்தித் தமது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள எதிர்க்கட்சி அரசியல் சக்திகள் முயற்சிப்பதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.