மதுபோதையில் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தைச் செலுத்திய சாரதியின் அனுமதிப்பத்திரம் இரத்து
மதுபோதையில் இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச) பேருந்தைச் செலுத்திய சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ஆயுட்காலத்திற்கு இரத்து செய்யுமாறு புதுக்கடை இலக்கம் 07 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (19) காலை மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தையில் வைத்து குறித்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி 05 ஆம் இலக்க மார்க்கத்தில் பயணித்த இ.போ.ச பேருந்தைச் சோதனையிடுவதற்காக மருதானை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும், பொலிஸாரின் கட்டளையை மீறி பேருந்து தொடர்ந்து செலுத்தப்பட்டதையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் அதனைப் பின்தொடர்ந்து சென்று வழிமறித்துச் சோதனை மேற்கொண்டனர். இதன்போது பேருந்து சாரதி மதுபோதையில் இருப்பது அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையிலும் அவர் மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாரம்மல பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய சந்தேகநபருக்கு 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஆயுட்காலத்திற்கு இரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.